திருமண மண்டபங்களும், விருந்துக் கூடங்களும் ஊருக்கு வெளியில் தனித்து இருப்பவை அல்ல. மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் தான் அவை உள்ளன. அந்த இடங்களில் ஒரே நேரத்தில் குறைந்தது ஆயிரம் பேர் முதல் பல்லாயிரக்கணக்கானோர் வரை கூடுவார்கள். அவர்களில் பாதிப்பேர் மது அருந்துவதாக வைத்துக் கொண்டால், அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதி மனிதர்கள் நடமாடும் பகுதியாக இருக்காது. திருமண மண்டபங்கள், விருந்துக் கூடங்களுக்கு அருகில் வீடுகள், ஆலயங்கள், பள்ளிகள் போன்றவை நிறைந்திருக்கும். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மது அருந்தினால், அவர்களின் அட்டகாசங்களால் அப்பகுதிகளில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத நிலை உருவாகும். அதுமட்டுமின்றி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விபத்துகளும், சட்டம், ஒழுங்கு சிக்கல்களும் அதிகரிக்கும்.