சென்னை அருகே என்கவுண்டர்: இரு ரெளடிகள் பலி!

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் காவல் துறையினர் நடத்திய என்கவுண்டரில் இரு ரெளடிகள் இறந்தனர்.
சென்னை அருகே என்கவுண்டர்: இரு ரெளடிகள் பலி!

சென்னை: சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் காவல் துறையினர் நடத்திய என்கவுண்டரில் இரு ரெளடிகள் இறந்தனர்.

கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் தலைமையில் காவல் துறையினர்  செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக ஒரு சொகுசு கார் வந்தது. அந்த காரை காவல் துறையினர்  சோதனை நடத்துவதற்காக மறித்து நிறுத்த முயன்றனர். 

ஆனால் அந்த கார்  உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை இடிப்பதுபோல சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை ஜீப் மீது வேகமாக மோதி நின்றது. இதைப் பார்த்த ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் காரில்  இருந்தவர்களை பிடிக்க ஓடினர். அப்போது காரில் இருந்து இறங்கி 4 நபர்கள், தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் காவல் துறையினரைத் தாக்க தொடங்கினர்.

முக்கியமாக உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் இடது கையில் ஒரு வெட்டு விழுந்தது. மேலும் அவரது தலையை நோக்கி வெட்ட பாய்ந்தபோது, சிவகுருநாதன் கீழே குனிந்ததால், அவர் தொப்பியில் வெட்டு விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆய்வாளர் முருகேசனும், உதவி ஆய்வாளர் சிவகுருநாதனும் தங்களது கைத் துப்பாக்கிகளினால் காவல் துறையினரை தாக்கிய ரெளடிகளை நோக்கி சுடத் தொடங்கினர். இதில் இருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. மற்ற இருவர் அங்கிருந்து தப்பியோடினர். 

இதைப் பார்த்த காவல் துறையினர், துப்பாக்கி குண்டு பாய்ந்த இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவர்கள், சிறிது நேரத்தில் இறந்தனர். ரெளடிகள் வெட்டியதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


நீதித்துறை நடுவர் விசாரணை:
 

இறந்த நபர்கள் குறித்து நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் படி, இறந்தவர்கள் ஓட்டேரி அருகே உள்ள மண்ணிவாக்கம்  சுவாமி விவேகானந்தா நகரைச் சேர்ந்த சு.வினோத் என்ற சோட்டா வினோத் (35), மண்ணிவாக்கம் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சு.ரமேஷ் (28) என்பது தெரியவந்தது.

காவல்துறையின் “ஏ பிளஸ்” ரெளடி பட்டியலில் இருக்கும் வினோத் மீது 10 கொலை வழக்குகள், 15 கொலை முயற்சி வழக்குகள், 10 கூட்டு கொள்ளை வழக்குகள், 15 அடிதடி, மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் உள்பட சுமார் 50 வழக்குகள் உள்ளன. 

காவல்துறையின் “ஏ” ரெளடி ரெளடி பட்டியலில் இருக்கும் ரமேஷ் மீது 5 கொலை வழக்குகள்,7 கொலை முயற்சி வழக்குகள், 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்த வழக்குககள் உள்பட 15 வழக்குகள் உள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதித்துறை நடுவர் விசாரணைக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் பரிந்துரை செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com