மயானத்தில் அரைகுறையாக எரிக்கப்படும் உடல்கள்!

ஒரு உடலை முழுவதும் எரியூட்டுவதற்கு 2 மணிநேரம் தேவைப்படும்.
மயானத்தில் அரைகுறையாக எரிக்கப்படும் உடல்கள்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மயானத்தில் உடல்கள் பகுதியளவு மட்டுமே எரியூட்டப்படும் அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.

நெசப்பாக்கத்திற்குட்பட்ட மயானத்தில் பகுதியளவு எரிந்த உடலை வெளியே எடுத்துவிட்டு, அடுத்த உடலை உள்ளே வைத்து ஏரியூட்டுவது அம்பலமானதன் மூலம் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

சென்னையில் உயிரிழந்த 68வயது முதியவரின் உடலை அந்த மயானத்திற்கு கொண்டுசென்று இறுதிச்சடங்கு முடிந்து எரியூட்டப்பட்ட 40 நிமிடங்களில், அவரின் உறவினர்களிடம் சாம்பல்  வழங்கப்பட்டதால் இந்த உண்மை தெரியவந்துள்ளது. 

ஒரு உடலை முழுவதும் எரியூட்டுவதற்கு 2 மணிநேரம் தேவைப்படும். இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மயனாத்திற்கு சென்று சோதனை செய்தபோது, அவர்கள் கொடுத்த உடல் பாதியளவு எரியூட்டப்பட்டு வெளியில் கிடத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான விடியோவையும் பதிவு செய்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து மயானத்தின் ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக பேசிய சுகாதார ஆய்வாளர், ஒரு உடலை முழுவதும் எரியூட்டுவதற்கு 2 மணிநேரம் ஆகும். இங்கு ஒரு நாளுக்கு 4 உடல்களை மட்டுமே எரிக்க முடியும். மாலை 4 மணியளவில் மேலும் 2 உடல்கள் எரியூட்ட இருந்ததால், அவசரமாக முடிப்பதற்காக பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை எடுத்து புதிய உடலை உள்ளே அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர், கவுன்சிலரின் அறிவுறுத்தலின்பேரில் இரவு 11 மணிக்கு அந்த உடல் முழுவதும் எரியூட்டப்பட்டது எனக் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஆனால் இப்போதுதான் முதல்முறையாக ஆதாரத்துடன் உண்மை தெரியவந்துள்ளது. குடும்பத்தாரிடம் சாம்பல் வழங்கப்பட்ட பிறகு எல்லா உடல்களையும் ஒன்றாக வைத்தே எரிக்கின்றனர் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com