
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், 14,000 பயனாளிகளுக்கு 88 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி பேசினார்.
அதன்படி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏராளமான திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து வழங்கப்பட இருக்கும் திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு பேசினார்.
* மீன்வளத் துறையின் பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை என்று மாற்றினோம்.
* மீன்பிடி குறைவுக் கால நிவாரணத்தை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, 1 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் இதனைப் பெற்று வருகிறார்கள்.
* தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மீன்வள இளங்கலைப் படிப்பில் மீனவ மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 5 விழுக்காட்டிலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தி இருக்கின்றோம்.
* காணாமல் போகும் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித் தொகையை 250 ரூபாயிலிருந்து 350 ஆக உயர்த்தி வழங்கி வருகிறோம்.
* இயற்கை மரணமடையும் மீனவர் நல வாரிய உறுப்பினர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம்.
* மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு தடுத்திடவும், மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும், கடல் அரிப்பு தடுப்புச் சுவர்களையும், மீன்பிடி இறங்கு தளங்களையும், தூண்டில் வளைவுகளையும் அமைத்து கொடுத்திருக்கின்றோம்.
* மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவியாக மீனவக் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் இதனால் பயனடைகிறார்கள்.
* கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். 14 கடலோர மாவட்டங்கள சார்ந்த 2 இலட்சத்து 7 ஆயிரம் மீனவர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு நிவாரணமாக 62 கோடியே 19 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
* கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலமாக 2 லட்சம் மீனவ மகளிர் பயன்பெற்று வருகிறார்கள்.
* மீனவர்களுக்கு மிக முக்கியமான தேவை டீசல் எரிபொருள். மீன்பிடி விசைப்படகுகளுக்கு ஆண்டொன்றிற்கு 18,000 லிட்டர்; நாட்டுப் படகுகளுக்கு ஆண்டொன்றிற்கு 4,000 லிட்டர் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசலை நம்முடைய அரசு வழங்கி வருகிறது.
* அதே போல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுடைய இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
* நாட்டுப் படகுகளுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கு 40 சதவிகிதம் மானியமாக வழங்கப்படுகிறது.
* 10 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி நாரிழைப் படகு, இயந்திரம், வலைகள் மற்றும் பனிக்கட்டி பெட்டி ஆகியவற்றை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
* புதிய தூண்டில் மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை சூரை மீன்பிடி படகு கட்டிட 50 சதவிகிதம் மானியம் தரப்படுகிறது.
* தமிழ்நாட்டில் கடற்பாசி வளர்ப்பை ஊக்குவிக்க 127 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
* ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 1,311 மீனவ மகளிருக்கு கடற்பாசி வளர்ப்பு மேற்கொள்ள கடற்பாசி வளர்ப்பு மிதவைகள் மற்றும் கயிறுகளை 1 கோடியே 42 லட்சம் ரூபாய் மானியத்தில் வழங்கியுள்ளது.
* திருவள்ளூர், இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்களுக்கு கடலில் மிதவை கூண்டுகளை அமைக்க மானியம் வழங்கப்பட்டிருக்கிறது.
* திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் மிதவை கூண்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
* தமிழ்நாட்டில் இறால் வளர்ப்பை ஊக்குவிக்க, மொத்தம் 100 ஹெக்டேர் பரப்பளவுகளில் புதிய இறால் வளர்ப்பு பண்ணைகள் அமைக்க 14 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
* நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குறைந்த அளவு நீர்ப் பயன்பாட்டில் இறால் வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக மொத்தம் 25 உயிர்க்கூழ் இறால் வளர்ப்பு அலகுகள் அமைக்க 4 கோடியே 50 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
* மயிலாடுதுறை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு கடல் மீன்குஞ்சு பொரிப்பகம் அமைக்க மொத்தம் 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்க அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.
* உள்நாட்டு மீன்வளத்தைப் பெருக்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* மீனவ சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற 6 மாத சிறப்புப் பயிற்சியை நடத்தி இருக்கிறோம். இதில் 41 மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
* மீனவ சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் கடல்சார் படிப்புகளை பயில தமிழ்நாடு அரசு 88 பேருக்கு மொத்தம் 27 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கியிருக்கிறது.
* மீனவ சமுதாயத்தை சார்ந்த 1000 நபர்களுக்கு கடலோர உயிர் பாதுகாப்புப் பயிற்சி 47 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவுகளில் வழங்கப்பட்டிருக்கிறது.
* தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் 9,547 பயனாளிகளுக்கு நிவாரண உதவியாக 12 கோடியே 43 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 42 மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மொத்தம் 431 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு என்னால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
* 109 மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களின் கீழ் மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்கள், கடற்கரைப் பாதுகாப்பு, அரசு மீன்பண்ணை கட்டுமானம் மற்றும் அலுவலக கட்டுமானம் போன்ற பணிகள் நடந்து வருகிறது. மேற்கண்ட திட்டங்கள் மொத்தம் ரூ.1,296 கோடியே 3 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் 14 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் 88 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் இந்த விழாவின் மூலமாக கொடுக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்ல, இங்கே, இத்தனை மீனவர்கள் வந்திருக்கிறீர்கள். இப்படி வந்திருக்கக்கூடிய நேரத்தில், அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் சென்றால் நன்றாக இருக்குமா? அதனால், நமது மீனவர்கள் எதிர்பார்த்து வரும் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்...
* மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்குப் பட்டா வழங்கப்படும்.
* 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும்.
* மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனி 8 ஆயிரம் ரூபாயாக அது வழங்கப்படும். திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில், சொன்ன முக்கியமான அறிவிப்பு இது. இந்த நிவாரணத் தொகையை 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பெற இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
* 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்துல நிவாரணத் தொகை வழங்கப்படும்.
* 1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 சதவிகித மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.
* தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவானது 3400 லிட்டரிலிருந்து 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
* மானிய விலையில் வழங்கப்படும் டீசல் எண்ணெய் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
* தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.
* குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த ஆய்வுப் பணிகளையும் தொடங்கி இருக்கிறோம்.
* பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
* மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
* மீன் பிடிக்கையில் காணாமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி 25 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
* மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அலகுத் தொகையானது 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
* பல மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தூண்டில் வளைவு அமைக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து கொண்டிருக்கிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருக்கின்ற ஒரு வழக்கு காரணமாக இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. இதற்கான கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து, உரிய ஒப்புதலை பெற்று தூண்டில் வளைவுகள் தேவைப்படும் இடங்களில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் பணிகளை விரைவில் தொடங்குவோம்.
இந்த திட்டங்கள் மூலம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 347 மீனவர்கள் பயனடைவார்கள். இதற்காக, மொத்தம் 926 கோடியே 88 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் போகிறோம். ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் போவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.