டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வெளிநாட்டில் இறந்த தமிழர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி!

வெளிநாட்டில் பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். 

News image
Updated On :22 ஆகஸ்ட் 2023, 9:39 am

DIN

வெளிநாட்டில் பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த் தமிழ்நாட்டின் கடமையாகும். இப்படி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்னைகளை தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றி பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன்/மகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று அங்கு பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களின் குடும்பத்திலுள்ள மகன்/மகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிடும் வகையிலும், திருமணத்தின் பொருட்டு ஏற்படும் எதிர்பாராத கூடுதல் செலவினத்தால் அக்குடும்பத்தினர் கடனில் சிக்கித் தவிப்பதை தடுக்கும் பொருட்டும் அக்குடும்பத்திலுள்ள மகன் / மகளுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கிடவும்; அவர்தம் குடும்பத்திலுள்ள மகன்/ மகளுக்கு கல்வியில் சிறந்த எதிர்காலத்தினை உருவாக்கிடும் வகையிலும்,
உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் விகிதத்தை அதிகரிப்பதற்கும், கல்வியில் அவர்களின் ஆர்வத்தினை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.12 ஆயிரம் வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

மேற்குறிப்பிட்ட திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை பெற அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்திருந்தல் வேண்டும். திருமண உதவித் தொகை பெற திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும், பழங்குடியினர் 5-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்களுக்கு மட்டும் திருமண உதவித் தொகை வழங்கப்படும். கல்வி உதவித் தொகை பெற தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது அயல்நாடுகளின் அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்று 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவர்கள், மருத்துவக் கல்லூரி படிப்பு / பொறியியல் படிப்பு / வேளாண்மை பொறியியல் (Agri. / Engg.) மற்றும் டிப்ளமோ படிப்பு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மூலம் தொழிற்கல்வி படிப்புகள் / பாலிடெக்னிக்குகள்
(Polytechnic)/ தொழிற் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை (Admission) பெற்ற மாணவர்கள் மட்டுமே இக்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

ஒரு குடும்பத்தில் இரண்டு மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்கப்படமாட்டாது. மேற்படி உதவித் தொகைகள் வழங்குவது தொடர்பான விரிவான நடைமுறை அயலகத் தமிழர் நல வாரியத்தால் வகுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.