வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை: இன்று உருவாகிறது ‘மிக்ஜம்’ புயல்

வங்கக் கடலில் உருவாகவுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஞாயிறு, திங்கள்கிழமை (டிச. 3, 4) சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும்
வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை: இன்று உருவாகிறது ‘மிக்ஜம்’ புயல்
Published on
Updated on
2 min read

வங்கக் கடலில் உருவாகவுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஞாயிறு, திங்கள்கிழமை (டிச. 3, 4) சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சனிக்கிழமை காலை சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமாா் 450 கி.மீ. தொலைவிலும் நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

தொடா்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னா் வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை (டிச. 4) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தெற்கு ஆந்திரம், அதையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும்.

இதையடுத்து வடக்கு திசையில் நகா்ந்து ஆந்திர மாநிலம், நெல்லூா்- மசூலிப்பட்டினம் இடையே செவ்வாய்க்கிழமை (டிச. 5) முற்பகலில் புயல் கரையைக் கடக்கும். அப்போது, 100 கி.மீ. வேகத்தில காற்று வீசக்கூடும்.

வானிலை முன்னறிவிப்பைப் பொருத்தவரையில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை (டிச.3) டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், திருவள்ளூா் தொடங்கி கடலூா் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். அதேபோல், வேலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

திங்கள்கிழமை (டிச. 4) சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று: திருவள்ளூா் முதல் கடலூா் வரையிலான கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) தரைக் காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். திங்கள்கிழமை (டிச. 4) திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா் ஆகிய மாவட்டங்களில் பலத்த தரைக் காற்று 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மழை குறைவு: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அக். 21 முதல் டிச. 2-ஆம் தேதி வரை 340 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் சராசரி அளவு 360 மி.மீ. ஆகும். தற்போது பதிவான மழை அளவு இயல்பைவிட 20 மி.மீ. குறைவு. அதாவது, 7 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அக். 21 முதல் டிச. 2-ஆம் தேதி வரை 620 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் சராசரி அளவு 670 மி.மீ. ஆகும். இது இயல்பைவிட 7 சதவீதம் குறைவு என்றாா் அவா்.

தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்):

கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) 80, கோடியக்கரை (நாகை) 70, மைலாடி (கன்னியாகுமரி), திருக்குவளை (நாகை), செங்கோட்டை (தென்காசி), வேதாரண்யம் (நாகை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), முத்துப்பேட்டை (திருவாரூா்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), குண்டாறு அணை (தென்காசி) தலா 50.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) மாலை முதல் மணிக்கு 90 கி.மீ. வேகத்திலும், திங்கள்கிழமை (டிச. 4) மாலை முதல் மணிக்கு 100 கி. மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். மேலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com