மிக்ஜம் புயல்... மத்திய அரசின் உதவி கேட்கப்படுமா? -முதல்வர் ஸ்டாலின் பதில்

மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புக் குழுக்கள் உள்ளதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்,தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி நிச்சயமாக கேட்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயல்... மத்திய அரசின் உதவி கேட்கப்படுமா? -முதல்வர் ஸ்டாலின் பதில்


மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புக் குழுக்கள் உள்ளதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி நிச்சயமாக கேட்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை(டிச.3)சென்னை,சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தபின்னர், 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை(டிச.1, 2) அரசு உயர் அலுவலர்கள்,பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் ஏற்கனவே அவர்களை எல்லாம் அழைத்து அறிவுரை வழங்கியிருக்கிறேன்.

அந்த அடிப்படையில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 4 ஆயிரத்தி 967 இதர நிவாரண மையங்களில்,
பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண மையங்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான
எச்சரிக்கை குறுஞ்செய்திகள் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது.

கடலோர மாவட்டங்களில் உள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை செய்திகள்
அனுப்பப்பட்டு வருகின்றன.

அதிலும், மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டது.இதனால் அனைத்து படகுகளுக்கும் பாதுகாப்பான ஒரு
சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

புயல் மற்றும் கனமழை குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து உங்களைப் போன்ற ஊடகங்கள் மூலமாகவும், செய்திகளை வெளியிட்டு தொடர்ந்து அந்தப் பணியை ஆற்றி வருகிறோம். புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் விளக்கமாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகி இருக்கக்கூடிய இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள்.

மாநில அவசரகால செயல்பாட்டு மையம், பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையம், மின்சாரத் துறை உட்பட அனைத்து கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பொதுமக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருப்பதாவது: புயலின் காரணமாக, பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்ற காரணமாக, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

தேவைப்பட்டால், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களில் தங்குமாறும் நான் கேட்டுக் கொள்கிறேன். அங்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மேலும், சென்னையைப் பொறுத்தவரைக்கும், அமைச்சர்கள் கே.என்.நேரு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,தங்கம் தென்னரசு,
மா.சுப்பிரமணியம், சேகர்பாபு  ஆகியோர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும்,அமைச்சர் மூர்த்தி அங்கே தன்னுடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைச்சர் காந்தி நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்,சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின்
பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், என்னென்ன பணிகள் செய்ய வேண்டுமோ, மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அந்தப் பணிகள் எல்லாம் அவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பெய்த மழையின் போது,இரவு பகல் பாராமல் அனைத்து பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக முதலில் அவர்களுக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோன்று, அடுத்த இரண்டு நாட்களுக்கும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை சீரமைக்கவும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுமாறு நான் அவர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

ஊடகங்களும் அரசின் செயல்பாடுகளுக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக முதல்வர் தெரிவித்தார். 

இதையடுத்து செய்தியாளர்கள் முதல்வரிடம், எதிர்க் கட்சித் தலைவர் ரூ.4500 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கொடுத்திருந்தாரே? என்ற கேள்விக்கு, நான் அரசியல் பேச விரும்பவில்லை. முதலில் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அந்த விஷயம்தான் பேச வந்திருக்கிறேனே தவிர, அவர்கள் சொல்கின்ற அரசியல் கேள்விகளுக்கு நான் விளக்கம் சொல்ல தயாராயில்லை.

தூர்வாரும் பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. புதிதாக அமைத்திருக்கிறோம். ஏற்கனவே, பழையதும் இருக்கிறது, அதிலுள்ள அடைப்புகளை அகற்றும் பணிகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்று இரவிலிருந்து, நாளை இரவு வரை மிக கனமழை பெய்யப் போவதாக சொல்லப்பட்டிருக்கிறது. சென்னையில் தேங்கியிருக்கக்கூடிய மழை நீரை வெளியேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தேவைப்படக்கூடிய அனைத்து இடங்களிலும், தேவை ஏற்படும் இடங்களில் மட்டுமல்ல, எங்கே பாதுகாப்பு தேவைப்படுகிறதோ அங்கேயெல்லாம் நிச்சயமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை, மொத்தம் 1000 மோட்டார் பம்புகளை தயாராக வைத்திருக்கிறோம்.

ஏற்கனவே, வெளிமாவட்டங்களிலிருந்து பணியாளர்கள், அலுவலர்கள்,பேரிடர் மீட்புக் குழுவினர் வந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு அனுப்பியிருக்கிறோம். எந்தெந்த மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்கிறதோ, எங்கே எல்லாம் இந்த பிரச்னைகள் இருக்கிறதோ, அவர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

மேலும் மத்திய அரசின் உதவி கேட்கப்படுமா? என்ற கேள்விக்கு, தேவைப்பட்டால் நிச்சயமாக கேட்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com