ஆந்திரத்தில் இன்று கரையைக் கடக்கிறது மிக்ஜம் புயல்: சென்னையில் படிப்படியாக மழை குறையும்

வங்கக் கடலில் நிலவும் மிக்ஜம் புயல் செவ்வாய்க்கிழமை (டிச. 5) காலை ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற இடத்தில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஆந்திரத்தில் இன்று கரையைக் கடக்கிறது மிக்ஜம் புயல்: சென்னையில் படிப்படியாக மழை குறையும்

சென்னை: வங்கக் கடலில் நிலவும் மிக்ஜம் புயல் செவ்வாய்க்கிழமை (டிச. 5) காலை ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற இடத்தில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சென்னைக்கு அருகில் நெருங்கி வந்து பெருமழையைக் கொடுத்த மிக்ஜம் புயல் திங்கள்கிழமை இரவு சென்னையைவிட்டு விலகி ஆந்திர மாநில எல்லைக்குச் சென்றது. இதனால் சென்னைக்கு புயல் ஆபத்து விலகியுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ‘மிக்ஜம்’ புயல்’ வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை (டிச. 4) காலை 8.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திரம்- வடதமிழக கடலோரப் பகுதிகளில் வலுப்பெற்று ‘தீவிர புயலாக’ சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.

அது தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை (டிச. 5) காலை தெற்கு ஆந்திர கடற்கரையையொட்டிய நெல்லூா்- மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா என்ற இடத்துக்கு அருகே தீவிரப் புயலாக கரையைக் கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்தில் இருக்கும்.

இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வடிவதற்கு வழியின்றி திங்கள்கிழமை சாலையில் ஆறாய் ஓடிய மழை வெள்ளம்.

புயல் சென்னையைக் கடந்து ஆந்திரம் நோக்கிச் சென்றுவிட்டதால் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது.

புதன்கிழமை (டிச. 6) முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச. 10) வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 5) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் வடதமிழக கடலோரப் பகுதியில்செவ்வாய்க்கிழமை (டிச. 5) காலை காற்றின் வேகம் மணிக்கு 95 முதல் 105 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 115 கி.மீ. வேகத்திலும் சுமாா் 6 மணி நேரத்துக்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையக்கூடும். இதனால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com