ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புத்தகங்களுக்கு நடுவே கண்கலங்கி அமர்ந்திருக்கிறேன்: எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை!

மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் 20 லட்சம் ரூபாய்க்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்கக் கூடும் என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

News image
Updated On :5 டிசம்பர் 2023, 3:16 pm

DIN

மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் 20 லட்சம் ரூபாய்க்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்கக் கூடும் என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரி எனும் பதிப்பகத்தை நடத்தி வருகிறார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக புத்தகங்கள் இருந்த குடோனுக்குள் மழை நீர் சென்றதால் அதிக அளவிலானப் புத்தகங்கள் சேதமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூலில், புத்தகங்களை இழந்தோம் என்ற தலைப்பில் வேதனைப் பதிவு ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் வேதனையுடன் கூறியிருப்பதாவது: நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனது. புத்தகங்களை இடம் மாற்ற இயலவில்லை. ஏராளமான புத்தகங்கள் நனைந்து வீணாகிப்போகின.


கண்ணீரோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்களுக்கு பெரியது. இருபது லட்ச ரூபாயிற்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்க கூடும். மீதமுள்ள புத்தகங்களைக் காப்பாற்றி கொண்டு வந்து வீடு முழுவதும் நிரப்பியிருக்கிறோம்.


நேற்று முழுவதும் வீட்டிற்குள்ளும் தண்ணீர் வரும் நிலை. இரண்டு படிகள் தண்ணீரில் முழ்கிவிட்டன. மின்சாரமில்லை. இணைய தொடர்பில்லை. எவரையும் உதவி கேட்டு தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆயினும் அருகிலுள்ள நண்பர்கள் ஒடியோடி வந்து புத்தகங்களைக் காப்பாற்ற உறுதுணை செய்தார்கள்.


மழை நின்ற இன்றும் மின்சாரமில்லை. வீட்டைச்சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கண்முன்னே புத்தகங்களை இழப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டுகாலம் எழுதிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் வங்கி கடன் உதவியாலும் தான் தேசாந்திரி பதிப்பகம் துவங்கினோம். உங்கள் ஆதரவால் வெற்றிகரமாகவே நடத்தினோம். ஆனால் நேற்றைய மழை எங்களை வேரோடு சாய்த்து விட்டது. 


புத்தகக் குடோனுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தோம். ஆனால் இயற்கை பேரிடர்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்துவிட்டார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலை. நெருக்கடியான சூழலில் ஈரமான புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன். எனக்கு தெரிந்த உலகம் புத்தகங்களும் வாசகர்களும் மட்டும் தான். அவர்கள் மீண்டும் என்னை மீட்பார்கள் என்ற நம்பிகையோடு எனப் பதிவிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.