ஈழத்தமிழர்களுக்காக பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்த விஜயகாந்த்!

"ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது" என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்த ஈரமுள்ள மனிதர் கேப்டன் விஜயகாந்த். 
ஈழத்தமிழர்களுக்காக பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்த விஜயகாந்த்!

ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1989-களில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவி புரிந்து  வந்த விஜயகாந்த், ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, "ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது" என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்த ஈரமுள்ள மனிதர் கேப்டன் விஜயகாந்த். 

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 25-ஆம் தேதி அழகர்சாமி நாயுடு -ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜயகாந்த்.  சிறு வயது முதலே சினிமாமீது இருந்த பிடிப்பின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதே நேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை ஒவ்வொரு காட்சியாக தன் நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு மதுரை கீரைத்துரையில் இருக்கும் தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார்.

"இனிக்கும் இளமை'யில் தொடங்கிய சினிமா பயணம் :
தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவு செய்து சென்னைக்கு வந்தார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில்,1978-ஆம் ஆண்டு இயக்குனர் எம்.ஏ.காஜா அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த, "இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தில், முதன் முதலாக ஒரு கெüரவத் தோற்றத்தில் நடித்தார். 1979-இல் "ஓம்சக்தி' மற்றும் 1980-இல் "தூரத்து இடிமுழக்கம்' போன்ற படங்களில் நடித்த அவருக்கு,1981-ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த "சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி நாயகனாக தன் பெயரை பதிவு செய்த அவர், "மனக்கணக்கு', "சிவப்பு மாலை', "நீதி பிழைத்தது', "பார்வையின் மறுபக்கம்', "ஆட்டோ ராஜா', "சாட்சி', "துரை கல்யாணம்', "நாளை உனது நாள்', "100-வது நாள்', "ஊமை விழிகள்' போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார்., 1984-இல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

கேப்டன் எனப் பெயர்வரக் காரணம்:
"வைதேகி காத்திருந்தாள்', "அம்மன் கோயில் கிழக்காலே', "சத்ரியன்', "புலன் விசாரணை' போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991- ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் "கேப்டன் பிரபாகரன்' என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100-ஆவது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் “"கேப்டன்'” என்று அழைக்கப்பட்டார்.

150-க்கும் அதிகமான படங்கள்...
"இனிக்கும் இளமை' (1978), "ஓம் சக்தி' (1979), "சட்டம் ஒரு இருட்டறை' (1981), "சாட்சி' (1983), "100}வது நாள்' (1984), "சத்தியம் நீயே' (1984), "தீர்ப்பு என் கையில்' (1984), "வைதேகி காத்திருந்தாள்' (1984), "ஏமாற்றாதே ஏமாற்றாதே' (1985), "நானே ராஜா நானே மந்திரி' (1985), "அம்மன் கோயில் கிழக்காலே' (1986), "ஊமைவிழிகள்'' (1986), "கரிமேட்டுக் கருவாயன்' (1986), "தழுவாத கைகள்' (1986), "சட்டம் ஒரு விளையாட்டு' (1987), "சிறை பறவை' (1987), "செந்தூரப் பூவே' (1988), "தென்பாண்டி சீமையிலே' (1988), "பூந்தோட்ட காவல்காரன்' (1988), "சத்ரியன்' (1990), "சந்தனக் காற்று' (1990), "புலன் விசாரணை' (1990), "கேப்டன்  பிரபாகரன்' (1991), "மாநகர காவல்' (1991), "சின்ன கவுண்டர்' (1992), "ஏழை ஜாதி (1993), "கோயில் காளை' (1993), "செந்தூரப் பாண்டி' (1993), "ஆனஸ்ட் ராஜ்' (1994), "என் ஆசை மச்சான்' (1994), "சேதுபதி ஐபிஎஸ்' (1994), "அலெக்ஸ்சாண்டர்' (1996), "உளவுத்துறை' (1998), "வானத்தைப்போல' (2000), "ரமணா' (2002), "சொக்கத்தங்கம்' (2003) போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களாகும். இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த்.

நடிகர் சங்கத் தலைவராக...

1999-ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். 2002-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்த போது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து "நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை' என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார்.

தொடர் போராட்டங்களில்...

1965-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனது சிறு வயதிலேயே விஜயகாந்த் பங்கேற்றதாகச் சொல்லப்படுகிறது. அதே போல, 1984-ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, படுகொலையை நிறுத்தவும், நீதி வேண்டியும் தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார்.

1986-ஆம் ஆண்டு அதே காரணங்களுக்காக சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த். அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1989-களில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவி புரிந்தும் வந்தார். ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, "ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது" என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டைத் தவிர்த்தார்.

வாழ்க்கையில் கொடை வள்ளலாகவே வாழ்ந்த விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com