நெல்லையில் நிவாரண தொகை வழங்கும் பணி தொடக்கம்

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது.
நெல்லையில் நிவாரண தொகை வழங்கும் பணி தொடக்கம்
Updated on
1 min read


நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது.

நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள 796 நியாயவிலை கடைகள் மூலம் 5 லட்சத்து 4,357 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18- ந்தேதி பெய்த அதிகனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கினால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்று பெரும் சேதம் ஏற்பட்டது.

வெள்ள சேதங்களை பார்வையிட நெல்லை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக பாதிப்புள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள பகுதிகளுக்கு 1000 ரூபாயும் நிவரணம் வழங்கப்படும் என அறிவித்தார். இதனை அடுத்து  மாவட்டத்தில் கடுமையாக பெருமழையால்  பாதிப்படைந்துள்ள தாமிரபரணி நதிக்கரை வட்டங்களான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், அதிக பாதிப்படைந்த கடற்கரை கிராமங்கள் மற்றும் அருகாமை பகுதிகளான இராதாபுரம் வட்டம், லெவிஞ்சிபுரம், செட்டிகுளம், கூடன்குளம், விஜயாபதி மற்றும் திருவம்பலாபுரம் ஆகிய 5 வருவாய் கிராமங்கள், திசையன்விளை வட்டம், திசையன்விளை, அப்புவிளை, உறுமன்குளம், கரைசுத்து புதூர், கரைசுத்து உவரி மற்றும் குட்டம் ஆகிய 6 வருவாய் கிராமங்கள் ஆகியவற்றில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகையாக தலா 6 ஆயிரம் ரூபாய் வீதமும்  மாவட்டத்தில் உள்ள ஏனைய கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வீதமும் வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இன்று காலை முதல் நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. மாவட்டத்தில் 796 கடைகள் மூலம் 5 லட்சத்து 4,357 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. 

இதில் குறிப்பாக 3 லட்சத்து 40 ஆயிரத்து 552 அட்டைதாரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், 1 லட்சத்து 63 ஆயிரத்து705 பேருக்கு 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதற்கென மாவட்டத்திற்கு  அரசால் 220.76 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலைமுதல் நிவரண தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் நெல்லை மாநகரத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம், சி.என்.கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கும் நிவாரண தொகையும் வழங்கினார். இந்த நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கவுன்சிலர் சுதாமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com