கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!
Published on
Updated on
1 min read

கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்துவைத்து  பேருந்து சேவையையும் முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா அருகில் கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் 88.52 ஏக்கா் பரப்பளவில் 60 ஆயிரத்து 452 சதுர அடி பரப்பில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு தென்மாவட்டங்களுக்குச் செல்லக் கூடிய மற்றும் சென்னைக்கு வரக்கூடிய பயணிகளின் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் செயல்படவுள்ளது.

இங்கிருந்து தினமும் 2 ஆயிரத்து 310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை கூடுதலாக இயக்க வாய்ப்புள்ளது. பேருந்து நிலைய வளாகத்தினுள் வெளியூா் மற்றும் மாநகர பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியாா் ஆம்னி பேருந்துகளும் வந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் மருத்துவமனை, நான்கு பெரிய உணவகங்கள், 100 கடைகள் என பயணிகளின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 4 சுத்திகரிப்பு அமைப்புகள் மூலம் 12 இடங்களில் 24 மணிநேர குடிநீா் வசதி, 540 கழிவறைகள், சிறுநீா் கழிப்பிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பேருந்துகள் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை அடையவும் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com