பாஜக தலைவர்கள் படம் இடம்பெறாத பதாகை
ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக தனது தலைமை தேர்தல் பணிமனையில் வைத்துள்ள பதாகையில் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் படம் இடம்பெறவில்லை.
காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் என யாருக்கு ஆதரவு என்பதை பாஜக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரிலான பதாகையுடன் தேர்தல் பணிமனையை புதன்கிழமை திறந்த அதிமுக, சிறிது நேரத்தில் வேட்பாளரையும் அறிவித்தது. அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என இபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. பாஜக முடிவைப் பொருத்து பதாகையில் மாற்றம் இருக்கும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தேர்தல் பணிமனை பதாகையில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் முற்போக்கு என்ற வார்த்தை புதன்கிழமை மாலை மறைக்கப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி என மாற்றப்பட்டது.