ரத்தான ரயிலுக்கு பயண குறுஞ்செய்தி: ரயில்வேயின் அலட்சியம்!

மதுரையில் இருந்து செல்லக்கூடிய ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்ட நிலையில், பயண குறுஞ்செய்தி தவறாக வந்ததால் பயணி ஒருவர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். 
ரத்தான ரயிலுக்கு பயண குறுஞ்செய்தி: ரயில்வேயின் அலட்சியம்!

அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சற்று வசதியாக இருப்பதாலும் கட்டணம் குறைவு என்பதாலும் பெரும்பாலானோர் ரயில் போக்குவரத்தை நம்பியிருக்கின்றனர். 

ஆனால் சமீபமாக டிக்கெட் முன்பதிவு செய்வதில் இருந்து (குறிப்பாக தத்கல் டிக்கெட்) இதர சேவைகள் வரை ரயில்வே நிர்வாகம் மீது அவ்வப்போது புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் ரயில்வேயின் தவறான குறுந்செய்தியால் தனது நண்பர் ஒருவர் அவதிப்பட்டதாக முகநூலில் வெங்கடசாமி ராமசாமி என்பவர் பதிவிட்டுள்ளார். 

முகநூலில் அவரது பதிவு:

ரயில்வேயின் சேவைக் குறைபாடு

ஒரு திருமணத்திற்கு மதுரை வந்திருந்த எனது குடும்ப நண்பர் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் 12-2-23 (ஞாயிறு) அன்று தேஜஸ் எக்ஸ்பிரஸில் சென்னை செல்ல முன்பதிவு செய்திருந்தார். புறப்படும் நேரம் மாலை 3.00 மணி.

அன்று காலை 11 மணிக்கு, சார்ட் தயாரிக்கப்பட்ட எஸ்.எம்.எஸ். செய்தியும் நண்பருக்கு வந்தது. அதில் ரயில் புறப்படும் நேரம் மாலை 3.00 மணி எனவும், மதுரையிலிருந்து சென்னை பயணம் என்றும் இருந்தது. நான் அவர்களை எனது காரில் மதுரை ஜங்சனில் 2.30 மணியளவில் சேர்த்தேன்.

ஆனால், தேஜஸ் ரயில் கடந்த இரு தினங்களாக திருச்சியிலிருந்து புறப்படுவதாக கவுன்டரில் இருந்த ஊழியர் தெரிவித்தார். ஆனால், அப்படிப்பட்ட செய்தி எங்களுக்கு வரவில்லையே என சொன்னதற்கு, அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்று மிகவும் சாதாரணமாக பதில் சொல்லி விட்டார்.

இன்னொருவர், சார் இந்த செய்தி பல பத்திரிகைகளில் வந்துள்ளதே என்றார். …… நீங்கள் எல்லாம் படித்தவர்கள் தானே என்கிற கிண்டல் தொனியில்.

பின்ன எதுக்கு ரயில்வே நிர்வாகத்தின் SMS (குறுஞ்செய்தி)சேவை?

பதிவு செய்துள்ள ஒவ்வொரு நபருக்கும், ரயில்வே நிர்வாகம் பயண நாளன்று குறுஞ்செய்தி அனுப்புகிறது. அதுதானே அன்றைய உண்மை நிலவரம் என எடுத்துக்கொள்வார்கள். அந்தச் செய்தியில் ரயில் திருச்சியிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்காதது நிர்வாகக் குறைபாடுதானே?

அந்த இக்கட்டான நிலையில், அன்று இரவு சிலீப்பர் பஸ்ஸில் மிகவும் சிரமப் பட்டு அதிக கட்டணத்தில் சென்னைக்குச் சென்றார்கள்.

இந்த நிலைக்கு ரயில்வே நிர்வாகத்தின் குறைபாடுதானே காரணம். இது சம்பந்தமாக நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி உரிய இழப்பீடு பெற நண்பர் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

அதிகாரமிக்க நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்று பார்க்கலாம்.

***

மதுரை ரயில் பாதையில் இணைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த பிப்ரவரி 6 முதல் மதுரை வழியாக செல்லக்கூடிய பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டும் சில ரயில்கள் வேறு பாதையில் மாற்றியும் விடப்பட்டுள்ளன.

ஆனால், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு சார்ட் தயாரானதும் ரயில் பயணம் குறித்து வரும் குறுஞ்செய்தி தவறாக இருப்பதால் பயணிகள் பலரும் குழப்பமடைகின்றனர். பகுதியாக ரத்து செய்யப்பட்ட விவரம் தெரியாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

ரத்து செய்யப்பட்ட, பகுதியாக ரத்து செய்யப்பட்ட, மாற்றிவிடப்பட்ட ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் கண்டிப்பாக முன்னதாகவே அதுகுறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com