எடப்பாடி கே.பழனிசாமி (கோப்புப் படம்)
எடப்பாடி கே.பழனிசாமி (கோப்புப் படம்)

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றது: இபிஎஸ்

உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
Published on

திருப்பரங்குன்றம்:  உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

திருமங்கலத்தை அடுத்த டி.குன்னத்தூரில் ஜெயலலிதா கோயிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் பிரியதர்சினி - முரளி உள்ளிட்ட 51 ஏழை,எளிய ஜோடிகளுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திருமணம் செய்து வைத்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:

இன்றைய தினம் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி .உதயகுமார் அவர்களின் மூத்த மகள் பிரியதர்சினி உள்ளிட்ட 51 ஏழை, எளிய மணமக்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

திருமண நிகழ்ச்சி இனிதாக நடத்தி முடிக்கப்பட்டது. ஏற்கனவே உயர் நீதிமன்ற அமர்வு கடந்த 2022 ஜூலை 11 இல் நடைபெற்ற பொதுக்குழு செல்லும், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள். உச்சநீதிமன்றத்தில் இன்றைக்கு அற்புதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.

பொதுக்குழு நடைபெற்றது செல்லும். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற நல்ல தீர்ப்பு மூலம், தர்மம், நீதி ,உண்மை வென்றுள்ளது. இந்த தீர்ப்பு ஒன்னறைகோடி அதிமுக தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பு முடிந்துவிட்டது.

அதோடு அவருக்கும் (முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும்) எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக தொண்டர்களின் சட்டபோராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இனி கட்சி எழுச்சியோடு பணியாற்றும்.

கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த தீர்ப்பின்மூலம் ஒன்னரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்கி விட்டார். எங்களது கட்சி பற்றி பேச அவருக்கு தகுதியும் இல்லை. தேவையும் இல்லை. அவருடைய கட்சி செல்வாக்கு உங்களுக்கு தெரியும். அதை நான் சொல்ல அவசியம் இல்லை .அவரது செல்வாக்கு கடந்த சட்டப்பேரவை, மக்களவை தேர்தலில் நிருபணம் ஆகிவிட்டது.

டி.டி.வி. தினகரனை நாங்கள் ஒரு ஆளாகவே பொருட்படுத்தவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நாங்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்தோம். அதிமுகவிற்காக உழைத்தவர்கள் தாராளமாக வரலாம். ஒருசில நபர்களைத்தவிர யார் வந்தாலும் அதிமுக வரவேற்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுமை, முடிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கலாம் என்கிறீர்கள்.

ஏற்கனவே நான் 4 ஆண்டுகள் 2 மாத காலம் நான் ஆட்சியை நடத்தினேன். எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த ஆட்சி இரண்டு நாள் நிக்குமா, மூன்று நாள் நிக்குமா, மூணு மாசம் நிக்குமா, ஆறு மாசம் நிக்குமா என்று கூறினார்கள். ஆனால் நான்கு ஆண்டுகள், 2 மாதம் தமிழகத்திற்கு பொற்கால ஆட்சியை கொடுத்தேன். அதேபோல் இந்த கட்சி நிற்குமா, போகுமா, இரண்டாக, நான்காக உடைந்துவிட்டது என தினமும் விவாத மேடையில் பேசிக் கொண்டிருந்தீர்கள். இப்போது ஒன்றாகிவிட்டது. கவலையே வேண்டாம். அதிமுக எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைவரா, பொதுச்செயலரா எனக் கேட்கின்றீர்கள், ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச்செயலாளர். நிரந்தர பொதுச்செயலராக மூத்த நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கு தேர்தலில் நிச்சயம் வெற்றி என்ற செய்திக்கு கைகொடுக்கும். மக்களவை தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது கூட்டணி குறித்து பிறகு பேசிக் கொள்ளலாம். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பல்லாயிரகணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற, எங்களது கட்சியினர் உழைத்து வருகின்றனர்.

திமுக கூட்டணியினருக்கு பயம் வந்ததால் வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளனர். இதுவே எங்களுக்கு வெற்றி. மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். உச்சநீதிமன்றத்தில் அவர் நீக்கப்பட்டது செல்லும் என்று கூறிவிட்டார்கள்.

அதிமுக கட்சி வலுவாகத்தான் உள்ளது. நீங்கள் தான் வலுவில்லை என்று பேசி வருகிறீர்கள். வலுவாக இருந்த காரணத்தினால் தான் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதிமுகவில் 66 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் ஓட்டுபெற்றிருந்தால் நாங்கள் ஆளுங்கட்சி ஆகி இருப்போம். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சில இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம்.

டி.டி.வி.தினகரனுடன் இருந்தவர்களில் பாதி பேர் எங்களிடம் வந்து விட்டார்கள். ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த ஈரோடு மாவட்ட செயலர் ,பேரவை செயலர் எல்லாம் வந்து அதிமுகவில் இணைந்து விட்டார்கள். இனிமேல் எல்லாரும் வந்து விடுவார்கள். யாரும் நிற்க மாட்டார்கள். தீர்ப்பை எதிர்பார்த்தார்கள். சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் தொண்டர்கள் எழுச்சி பெறுவார்கள். எதிர்காலத்தில் சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு நல்லாட்சியை அதிமுக தரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com