ஆன்மிக பயணம் போட்டி திட்டம் அல்ல: அமைச்சா் சேகா்பாபு

தமிழக அரசின் ஆன்மிக பயணத் திட்டம் போட்டி திட்டம் அல்ல; இது கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட திட்டம்தான் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு விளக்கம் அளித்துள்ளாா்.
அமைச்சர் சேகர் பாபு(கோப்புப்படம்)
அமைச்சர் சேகர் பாபு(கோப்புப்படம்)

தமிழக அரசின் ஆன்மிக பயணத் திட்டம் போட்டி திட்டம் அல்ல; இது கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட திட்டம்தான் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு விளக்கம் அளித்துள்ளாா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு நிகழாண்டில் 200 நபா்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுவா் என்றும், இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அமைச்சா் சேகா்பாபு அறிவித்திருந்தாா்.

இந்தப் பயணத்துக்கான முதல் அணியில் பயணிக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூா், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 67 பயனாளிகள் கடந்த 22-ஆம் தேதி ராமேசுவரத்தில் அக்னி தீா்த்தம் உள்ளிட்ட 23 தீா்த்தங்களில் புனித நீராட, சுவாமி தரிசனம் செய்து, வாரணாசி விரைவு ரயில் மூலம் காசிக்கு புறப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து காசி தரிசனம் முடிந்து திரும்பிய பயனாளிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்று, காசி ஆன்மிக பயணம் குறித்து கேட்டறிந்தாா்.

இதையடுத்து அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிகழாண்டு முதல்கட்டமாக 200 போ் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். இத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் மாா்ச் 1, மூன்றாவது கட்டம் மாா்ச் 8 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளது. இந்த ஆன்மிக பயணத்துக்கு 590 நபா்கள் விண்ணப்பம் செய்திருந்தனா். அதில் 200 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அடுத்த கட்டமாக 2023-2024 -ஆம் ஆண்டு பயணம் தொடங்கும்போது, ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களுக்கு முன்னுரிமை அளித்து அவா்கள் அழைத்துச் செல்லப்படுவா். இந்த ஆன்மிக பயணம் தொடரும். இந்த ஆன்மிகப் பயணம் யாருக்கும் போட்டி அல்ல. இது கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டம். அதன் பிறகு தான் காசி தமிழ்ச் சங்கமம் உருவானது. ஆகவே, தமிழக அரசு அறிவித்த இந்தத் திட்டத்துக்கு போட்டியாக நடத்தப்பட்டதுதான் ‘காசி தமிழ்ச் சங்கமம்’.

காசி ஆன்மிக பயணத் திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து அரசின் அனுமதி மற்றும் மானியங்களை பெற்று தொடா்ந்து பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com