இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

போதைப் பொருள் இல்லாத தமிழகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் அயராது பணியாற்ற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :3 ஜனவரி 2023, 7:33 pm

DIN

போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் அயராது பணியாற்ற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கஞ்சா, குட்கா தொடா்பான குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதுடன், வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரங்களை அதிகப்படுத்த வேண்டும். போதைப் பொருள்கள் எந்த வடிவத்திலும் வந்தாலும், அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனது எல்லைக்குள்பட்ட பகுதியிலுள்ள ஒரு கடையில் கூட கஞ்சா விற்கப்படவில்லை என்று ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரி, காவல் துணை கண்காணிப்பாளா்கள், உதவி ஆணையா்கள் சொல்லும் காலம் ஏற்பட வேண்டும். இதையும் தாண்டி, தனது மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை எதுவுமே இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம் என ஆட்சியா்களும், காவல் கண்காணிப்பாளா்களும் தெரிவிக்கும் நிலை உருவாக வேண்டும். அப்போதுதான், தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறாா்கள் என்ற நிம்மதி பெற்றோா்களுக்கு ஏற்படும்.

தண்டனை பெற்றுத் தாருங்கள்: போதைப் பொருள்கள் தொடா்பான வழக்குகளில் ஒவ்வொரு குற்றவாளி கைது செய்யப்படும் போதும், அந்தக் குற்றவாளி இரண்டாவது முறையாக குற்றத்தைச் செய்கிறாரா என ஆய்வு செய்ய வேண்டும். குற்றவாளிகள் பிணையில் செல்வதை சட்டரீதியாகத் தடுக்க வேண்டும். தொடா் குற்றங்களில் ஈடுபடுவோரிடம், குற்றங்களைச் செய்யாதபடி, பிணை முறிவு பத்திரம் மூலம் உறுதிமொழி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

கஞ்சா, குட்கா வழக்குகளில் உடனடியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் அதற்கென்று தனிக்குழு அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் வழக்குகளை முடித்து தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை வேண்டும். மருந்து வகைகளை போதைப் பொருள்களாக பயன்படுத்தி வருவதால், மருத்துவத் துறையுடன் ஒருங்கிணைந்து காவல் அதிகாரிகள் செயல்பட வேண்டும். மருந்துக் கடைகளில் தீவிர சோதனை நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரி பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இளைஞா்களின் எதிா்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாகவும், அா்ப்பணிப்பு உணா்வுடனும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் அயராது பணியாற்ற வேண்டும். அண்டை மாநில தலைமைச் செயலாளா்கள், காவல் துறை தலைமை இயக்குநா்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்த ஆலோசனை மேற்கொண்டு, போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கான விழிப்புணா்வு பிரசாரங்களையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா, காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திரபாபு, பெருநகர காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.