நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தோ்த் திருவிழா: நாளை ஆருத்ரா தரிசனம்!

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

News image

சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்

Updated On :5 ஜனவரி 2023, 5:09 am

DIN



சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

வீதிவலம் வந்த 5 தேர்கள்: நடராஜர் கோயிலில் கடந்த டிச.28-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித் சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை 5.50 மணிக்கு எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழவீதி தேர்நிலையை அடைந்தன.

Story image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்

உழவாரப்பணி மற்றும் திருமுறை இன்னிசை: தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர்.

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி: மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது. இதனை முன்னிட்டு முன்னதாக மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

Story image

மக்கள் வெள்ளத்தில் வீதி உலா வரும் தேர்கள்

நாளை மகாபிஷேகம், ஆருத்ரா தரிசனம்: நாளை வெள்ளிக்கிழமை (ஜன.6) தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும். ஸ்வர்ணாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித் சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித் சபை பிரவேசமும் நடைபெறுகிறது. சனிக்கிழமை (ஜன.7) இரவு பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. 

Story image

விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிஎஸ்எஸ்.ஹேமசபேச தீட்சிதர், துணைச்செயலாளர் கே.சேதுஅப்பாசெல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் சு.ரா.நடராஜகுஞ்சிதபாத  தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். 

சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், தீபா மற்றும்  போலீஸார்  பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர்  அஜிதாபர்வீன், பொறியாளர் மகாராஜன் ஆகியோர் செய்தனர். 

Story image

போலீஸாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

உள்ளூா் விடுமுறை: சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.