சுவாமிமலையில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுவாமிமலையில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
Updated on
1 min read


தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. 

இங்கு அறுபது தமிழ் ஆண்டு தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும். இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் ஆண்டு தேவதைகளும், 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம். மேலும், இத்தலத்தில்தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு.

இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இவ்விழா வியாழக்கிழமை (ஜன.26) கொடியேற்றத்துடன் தொடங்கியது.  
வள்ளி தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்புமலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. 

தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது, வரும் 30-ஆம் தேதி இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெருகிறது. தைப்பூச நாளான பிப்.4 ஆம் தேதி காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, 5 ஆம் தேதி சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்ப உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com