திண்டுக்கல் மாமன்ற கூட்டத்திலிருந்து பாஜக, அதிமுக வெளிநடப்பு

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 கடைகளுக்கு ரகசியமாக நடத்தப்பட்ட ஏலத்தை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி கூட்டத்திலிருந்து பாஜக, அதிமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளியேறினர்.
திண்டுக்கல் மாமன்ற கூட்டத்திலிருந்து பாஜக, அதிமுக வெளிநடப்பு
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 கடைகளுக்கு ரகசியமாக நடத்தப்பட்ட ஏலத்தை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி கூட்டத்திலிருந்து பாஜக, அதிமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளியேறினர்.

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் மேயர் இளமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயர் ராஜப்பா, ஆணையர்(பொறுப்பு) நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவதாம் வருமாறு:

கணேசன்(2ஆவது வார்டு):

திண்டுக்கல் நகராட்சியாக இருந்தபோது 481 தூய்மைப் பணியாளர்கள் இருந்தனர். மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்ட பின் தற்போது 160 பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். எனவே, தூய்மைப் பணியாளர்களுக்கான பணி வாய்ப்பினை உத்தரவாதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பாஸ்கரன்(34ஆவது வார்டு):

மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் அந்தந்த வார்டு உறுப்பினர்களுக்கு கூட தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. 34ஆவது வார்டு பகுதியில் தரைப் பாலம் கட்டுவது தொடர்பாக தற்போது தான் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த பாலம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. இதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சம்மந்தப்பட்ட திமுகவினரை துணை மேயர் கண்டிக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதில் அளித்த துணை மேயர் ராஜப்பா, நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றும் வரை காத்திருக்காமல் வளர்ச்சிப் பணிகளை திமுக ஆட்சியில் துரிதமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதேநேரதத்தில், மாமன்ற உறுப்பினர் பாஸ்கரன் இருக்கை இடமாற்றம், பேருந்து நிலைய கடைகளுக்கு ரகசிய ஏலம் நடத்தியது உள்ளிட்ட பிரச்னைகளை பேசினார். அப்போது இடைமறித்து பேசிய துணை மேயர் ராஜப்பா, யோவ் என அவமரியாதையாக குறிப்பிட்டதால் சக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பேசிய ராஜப்பா, மாமன்ற உறுப்பினருக்கு(பாஸ்கரன்) எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்குமாறு எதிர்கட்சித் தலைவரான ராஜ்மோகனிடம்(அதிமுக) அறிவுறுத்தினார்.

ஜி.தனபாலன்(14ஆவது வார்டு): திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதை வரவேற்கிறோம். அதேபோல்,  கோபாலசமுத்திரக் கரையில் சுதந்திரப் போராட்டத் தியாகி கோபால்நாயக்கரின் சிலையை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

34 கடைகள் ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்:

இந்த நிலையில் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட 99ஆவது தீர்மானமாக திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 புதிய கடைகள் ஏலம் விட்டதற்கான விவரங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானத்துக்கு பாஜக சார்பில் மாமன்ற உறுப்பினர் தனபாலன், அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர்கள் ராஜ்மோகன், பாஸ்கரன், சத்தியவாணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தும், அந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் வலியுறுத்தினர்.

இதனிடையே திமுக மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, அமைச்சர் ஐ.பெரியசாமி குறித்து அவதூறாக பேசியதற்கு பாஜக உறுப்பினர் தனபாலன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், அமைச்சர் குறித்து தான் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், மாநகராட்சி ஆணையர் கூறிய கருத்துக்களை மட்டுமே தான் தெரிவித்ததாகவும் தனபாலன் விளக்கம் அளித்தார்.

ஆனாலும் திமுக, அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பாஜக உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக உறுப்பினருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். பின்னர் பாஜக, அதிமுக உறுப்பினர்கள் 99 ஆவது தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி வெளிநடப்பு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து எஞ்சிய 103 தீர்மானங்கள் என மொத்தம் 202 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மரபுகளை மீறி உறுப்பினர்கள் பேச அனுமதி:

மாமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர், துணை மேயர், ஆணையர், பொறியாளர் ஆகியோர் பதில் அளிப்பது வழக்கம். ஆனால்,  இந்த மரபுகளை மீறி அதிமுக, பாஜக உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களே பதில் அளித்தனர். இதனால் மன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும், அந்த நேரத்தில் மேயர், துணை மேயர் ஆகியோர் அமைதியாக இருந்தனர்.

சட்டையை மாற்றிய மாமன்ற உறுப்பினர்:

கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ஜோதிபாசு கருப்புச் சட்டை அணிந்து வந்தார். 34 கடைகளுக்கு ரகசிய ஏலம் விட்டதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். இதனை அறிந்த ஜோதிபாசு உடனடியாக மன்றத்திலிருந்து வெளியேறி கருப்புச் சட்டையை மாற்றி வெள்ளை சட்டையுடன் வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com