
சேலம்: தம்மம்பட்டி பேரூராட்சி திமுக தலைவரை எதிர்த்து திமுக உறுப்பினர்களே கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். திமுகவைச் சேர்ந்த நகர கழக செயலாளர் வி.பி. ராஜா மற்றும் அவரது மனைவி கவிதா தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இருவரும் சேர்ந்து தன்னிச்சையாக முடிவெடித்து மூன்று வார்டுகளை தவிர 15 கவுன்சிலர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யாமலும் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, முறையாக உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவதில்லை. இதை கண்டித்து கேட்டால் அடாவடியாக பேசுவது, தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிக்க | வணிக, தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
இதனைக் கண்டித்து பேருராட்சி அலுவலகம் முன்பு தர்னா போராட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் வாக்களித்த மக்களுக்கு எந்த ஒரு பணிகளும் செய்ய முடியவில்லை. அதனால் அவரை கண்டித்து வருகிற 7 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தம்மம்பட்டி காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு தம்மம்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 15 பேர் மனு அளித்தனர்.
இதில், திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர். திமுக பேரூராட்சி மன்ற தலைவரை எதிர்த்து திமுக உறுப்பினர்களே கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.