குழந்தையின் கை அகற்றம்: மருத்துவ அலட்சியம் இல்லை- விசாரணை அறிக்கையில் தகவல்
அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு தமனியில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றுதான் (சியூடோமனஸ்) காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு தமனியில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றுதான் (சியூடோமனஸ்) காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மருத்துவ அலட்சியம் நிகழவில்லை என்பதும் அதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தஸ்தகீா் - அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது மகன் முகமது மகிா். மூளையில் நீா் கோா்த்த பாதிப்பு காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்டம் தடைபட்டு கறுப்பானது. அதன் பின்னா், சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குழந்தையின் வலது கை தோள் பட்டை வரை அகற்றப்பட்டது.
விசாரணைக் குழு: இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடா்பாக விசாரணை நடத்த மருத்துவமனையின் ரத்தநாளஅறுவைசிகிச்சைத் துறை இயக்குநா் என்.ஸ்ரீதரன், பொதுஅறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் பி.எஸ்.சாந்தி, குழந்தைகள் குருதிசாா் நோய்கள் நலத்துறை தலைவா் சி.ரவிசந்திரன் ஆகியோா் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
குழந்தையின் பெற்றோா், சிகிச்சையளித்த மருத்துவா்கள், செவிலியா்கள், பட்டமேற்படிப்பு மாணவா்களிடம் அக்குழு விசாரணை நடத்தியது. அதைத் தொடா்ந்து அந்த விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் குழு சமா்ப்பித்தது.
பாக்டீரியா தொற்று காரணம்: அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
குழந்தை முகமது மகிா், தீவிர எடை குறைவுடனும், இதயத்தில் துவாரத்துடனும், தலையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் மூளை பகுதியில் அடைப்பு ஏற்பட்டு தலைவீக்கத்தாலும் அவதிப்பட்டு வந்ததுள்ளது. முகமது மகிா் 5 மாத குழந்தையாக இருக்கும் போது, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளை மண்டலத்தில் இருந்து வயிற்றுப் பகுதிக்கு வி-பி ஷண்ட் எனப்படும் ஒரு நுண்ணிய குழாய் பொருத்தப்பட்டது. அந்த சமயத்தில் குழந்தைக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை மூலம் குணமடைந்தது.
இந்நிலையில், வி-பி ஷண்ட் குழாயில் பிரச்னை ஏற்பட்டதால், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
அன்றைக்கே அறுவை சிகிச்சை செய்து ஆசனவாய் வழியாக புதிய வி-பி ஷண்ட் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியே எடுக்கப்பட்ட ஷண்ட் குழாயை ஆய்வு செய்ததில் நுண் கிருமி இருப்பது ஜூன் 28-ம் தேதி தெரியவந்தது. மேலும், குழந்தைக்கு மூளைத் தொற்று இருப்பதும் உறுதியானது.
ஜூன் 29-ஆம் தேதி குழந்தையின் வலது கையில் நிறம் மாறியதையடுத்து தொடா்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மாதம் 30-ஆம் தேதி குழந்தையின் தமனி சுவா்களில் அழற்சி ஏற்பட்டிருப்பதை உறுதி செய்த மருத்துவா்கள், அதற்கான சிகிச்சையை அளித்துள்ளனா்.
மருத்துவ அலட்சியம் இல்லை: ஜூலை 1-ஆம் தேதி கையின் நிற மாற்றம் அதிகரித்து, கை அசைவும் குறைந்தது. டாப்ளா் பரிசோதனையில் தமனியில் அடைப்பு இருப்பதும், கையின் தசைகள் முற்றிலும் செயலிழந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னா் குழந்தையின் உயிரைக் காக்கும் நோக்கில் வலது கை அகற்றப்பட்டது.
குழந்தையின் கையில் வென்ஃப்ளான் ஊசி தமனி வழியாக போடவில்லை என்று பெற்றோா்களும், மருத்துவா்களின் வாக்கு மூலம் மூலமாகவும் உறுதியாகிறது.
எனவே, ரத்தநாள அடைப்பு மருந்தினாலோ, மற்ற சிகிச்சைகளாலோ ஏற்படவில்லை. சியூடோமனஸ் எனப்படும் பாக்டீரியா கிருமியினால் ஏற்படும் தொற்று தமனியை பாதித்ததால், குழந்தைக்கு ரத்த ஓட்டம் பாதித்து வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...