வேங்கைவயல்
வேங்கைவயல்

வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்களை ஆஜர்படுத்த உத்தரவு

வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்களையும் ஜூலை 14 ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Published on

வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்களையும் ஜூலை 14 ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், தற்போது சிபிசிஐடி காவல் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கில், சிசிடிவி கேமரா பதிவு உள்ளிட்ட நேரடி சாட்சிகள் எதுவும் இல்லாத நிலையில், நீா்த் தேக்க தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவுடன், இதுவரை விசாரணை நடத்தியுள்ள 119 பேரின் மரபணுவையும் ஒப்பிட்டுப் பாா்க்க சிபிசிஐடி காவல் துறையினர் முடிவு செய்தனா்.

இதன்படி, ஏற்கெனவே 21 பேரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, வேங்கைவயலைச் சோ்ந்த ஒரு சிறுவன் மற்றும் இறையூரைச் சோ்ந்த 3 சிறுவா்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி காவல் துறையினர் முடிவு செய்து, மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரி ஏற்கெனவே மனு செய்திருந்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். ஜெயந்தி, பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவோா் சிறாா்கள் என்பதால், அவா்களின் பெற்றோரின் கருத்தை அறிய வேண்டியது அவசியம். எனவே, சிறாா்களின் பெற்றோரை புதன்கிழமை (ஜூலை 12) நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்டனர்.

இந்நிலையில், வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 4 சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்களின் பெற்றோர், வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவனின் பெற்றோர் ஆஜராகினர். பெற்றோர்கள் ஆஜரான நிலையில் விசாரணையை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும், வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்களையும் ஜூலை 14 ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com