கலைஞா் நூற்றாண்டு நூலகம்: திறந்து வைத்தார் முதல்வர்!

மதுரையில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) மாலை திறந்துவைத்தார். 
கலைஞா் நூற்றாண்டு நூலகம்: திறந்து வைத்தார் முதல்வர்!

மதுரையில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) மாலை திறந்துவைத்தார். 

நூலகத்தை திறந்து வைத்து நூலக வாளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். டி.ஆர். பாலு, ஆ. ராசா, சு.வெங்கடேசன் உள்ளிட்ட எம்.பி.க்களும் கலந்துகொண்டனர். 

சிறப்பு விருந்தினர்களாக ஹெச்.சி.எல். குழும நிறுவனர் ஷிவ் நாடார், ஹெச்.சி.எல். குழும தலைவர் ரோஷினி நாடார் ஆகியோர் பங்கேற்றனர்.

கருணாநிதி நூற்றாண்டு நூலகம்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நூற்றாண்டையொட்டி, தமிழக அரசு சாா்பில் மதுரை- புதுநத்தம் சாலையில் ரூ. 134 கோடியில் 2,13,334 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களைக் கொண்ட நூலகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

அனைத்துத் தளங்களும் குளிா்சாதன வசதி கொண்டதாகவும், சிறுவா்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான அடிப்படைத் தேவைகளுடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நூலகத்தின் சிறப்பம்சங்கள்:

சிறுவர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், பொதுமக்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. சுமார் 4.3 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.  

6 மின்தூக்கிகள் (லிப்ட்), 6 தானியங்கிப் படிகள் (எஸ்கலேட்டர்), சுமார் 150 வாகனங்களை நிறுத்தும் வசதி அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகள் பிரிவு, மாநாட்டு அரங்கம், கலைக்கூடம் ஆகியவை தரைத் தளத்தில் அமைந்துள்ளன. 

முதல் தளத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படைப்புகள், அவர் குறித்து பிற அறிஞர்கள் எழுதிய நூல்கள் உள்ளன. 

இங்கு நூல்கள் அனைத்து டிடிசி எனப்படும் நூலக அறிவியல் முறைப்படி அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் தொடுதிரை மூலம் நூல்களைக் கண்டறியும் வசதியும் அமைக்கப்படுகிறது.

 இணையவழியில் புத்தகங்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியதாக இந்தத் தொடுதிரைகள் அமைக்கப்படுகின்றன.

இந்த நூலகத்துக்கு 71 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 30 பணியாளர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து இங்கு அனுப்பப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் 15 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com