ரயில்களில் மகளிர் பெட்டிகளை இடம் மாற்றுகிறதா ரயில்வே?

ரயில்களில் மகளிர் பெட்டிகளை இடம் மாற்றுகிறதா ரயில்வே?

ரயில்களில் மகளிர் பெட்டிகளை மாற்றியமைக்க ரயில்வே முடிவு செய்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சென்னை: ரயில்களில் தலா இரண்டு மகளிர் பெட்டிகள் முன் மற்றும் பின் பக்கங்களில் அமைந்திருக்கும் நிலையில், இதனை மாற்றியமைக்க ரயில்வே முடிவு செய்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பறக்கும் ரயிலில், பெண்ணிடமிருந்து கைப்பேசியை பறிக்க முயன்ற சம்பவத்தில், அப்பெண் ரயிலில் சிக்கி பலியான சம்பவம் நடந்து ஒருசில வாரங்கள் ஆன நிலையில், ரயில்களில் மகளிர் பெட்டிகளை இடம் மாற்றுவது தொடர்பாக ஆலோசனையில் சென்னை ரயில்வே மண்டலம் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ரயிலுக்கும் இரண்டு ரயில்வே பாதுகாவலர்களை நியமிப்பது என்பது இயலாத காரியம் என்பதால், ரயில்களில், இரண்டு மகளிர் பெட்டிகளையும், நடுப்பாகத்தில் ஒன்றாக சேர்த்து போட்டுவிட்டால், ஒரே ஒரு பாதுகாவலர், இரண்டு மகளிர் ரயில் பெட்டிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்பதே ரயில்வே மண்டலத்தின் திட்டம்.

இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே காவல்துறையில் போதுமான வீரர்கள் இல்லாததால், ஒவ்வொரு ரயிலுக்கும் இரண்டு பாதுகாவலர்களை பணியமர்த்துவது என்பது இயலாத காரியம். எனவே, பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ரயில்களில் முன் மற்றும் பின்பக்கங்களில் இருக்கும் இரண்டு மகளிர் பெட்டிகளை, நடுப்பக்கத்தில் ஒன்றாக சேர்த்து விட்டால், ஒரே பாதுகாவலர்கள் மூலம் ரயில் பெட்டிகளை பாதுகாக்கலாம் என்று ரயில்வே மண்டல அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும் இரண்டு வழித்தடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட விருக்கிறது. தற்போது, இரண்டாவது பெட்டியானது முதல் வகுப்பு மற்றும் இரண்டு மகளிர் பெட்டிகளை அடக்கியதாக முன் மற்றம் பிக்கங்களில் அமைந்திருக்கும் இவை தற்போது, முன் பக்கத்திலிருந்து 4 மற்றும் 5வது இடங்களுக்கு மாற்றப்படும். இதுபோலவே, 12 பெட்டிகள் கொண்ட ரயிலிலும் இந்த மாறுபாடு செய்யப்படவிருக்கிறது. இந்த ரயில்களில் மகளிர் பெட்டிகள் 6வது மற்றும் 7வது இடங்களுக்கு மாற்றப்படவிருக்கின்றன. 

அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இது தொடர்பான பரிந்துரை மூத்த ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரியால் முன்வைக்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆவடி, தாம்பரம், வேளச்சேரியில் உள்ள ரயில் பெட்டிகள் பணிமனையில், இது தொடர்பான மாறுபாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், பெரும்பாலான மகளிர் பெட்டிகள், பாதுகாப்பு நிறைந்ததாக மாறிவிடும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது, கூட்ட நெரிசல் இருக்கும் நேரங்களில், மகளிர் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். சென்னை மண்டலத்தில் 668 ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. இதில் 12 பெட்டிகளைக் கொண்ட 299 சேவைகளும், 9 பெட்டிகளைக் கொண்ட 330 சேவைகளும் 39 புறநகர் ரயில் சேவையும் அமையும்.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை - திருத்தணி, சென்னை - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாள்தோறும் 11.5 லட்சம் பயணிகள் ரயிலில் பயணிக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com