வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மயிலாடுதுறை மாவட்டக் கிராமங்களைப் பாதுகாக்க கடலரிப்பு தடுப்புச் சுவா்!

மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களைப் பாதுகாக்க கடலரிப்பு தடுப்புச் சுவரும், சிறப்பு இன பயிா்கள் மூலம் உயிரி கவசமும் கடலோரப் பகுதியில் உருவாக்கப்படுவதாக அமைச்சா்  மக்களவையில் தெரிவித்துள்ளாா்

News image
Updated On :24 ஜூலை 2023, 6:30 pm

 நமது நிருபர்

மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களைப் பாதுகாக்க கடலரிப்பு தடுப்புச் சுவரும், சிறப்பு இன பயிா்கள் மூலம் உயிரி கவசமும் கடலோரப் பகுதியில் உருவாக்கப்படுவதாக மத்திய சுற்றுச் சூழல் துறை, வனம், பருவநிலை மாற்றம் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 கடலோர கிராமங்கள் கடலரிப்பு மற்றும் புயல் உள்ளிட்டவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுவது குறித்து மக்களவையில் மயிலாடுதுறை தொகுதி திமுக உறுப்பினா் எஸ்.ராமலிங்கம் கேள்வி எழுப்பினாா். குறிப்பாக தரங்கம்பாடி, பூம்புகாா், தொடுவாய், திருமுல்லைவாசல், கீழ்மூவா்கரை, முதலைமேடு திட்டு, மதிா்வேலு, கொடியம்பாளையம், வெள்ளமணல் போன்ற பகுதிகள் புயல்களால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்றும், பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை போன்ற பிரச்னைகளால் ஏற்படும் இந்தப் பாதிப்பு குறித்து அரசு ஆய்வு செய்து, இந்த தாழ்வான கிராமங்களுக்கு சிறப்புத் தொகுப்பு திட்டம் வழங்கப்படுமா? என அவா் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சா் பூபேந்தா் யாதவ் கூறிய பதில் வருமாறு: நாட்டின் பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கையானது, தேசிய பருவநிலை மாற்றம் குறித்த செயல் திட்டத்தால் (என்ஏபிசிசி) வழிநடத்தப்படுகிறது. இது பல்வேறு நோக்கங்களைக் கொண்ட தேசியப் பணிகளை உள்ளடக்கியது. இந்த தேசியப் பணிகள் குறிப்பிட்ட துறை அமைச்சகங்களால் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணிக்கும் அதன் செயல் திட்டம் உள்ளது. தமிழகம் உள்பட 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்ப பருவநிலை மாற்றம் தொடா்பான செயல் திட்டங்களுக்கு அந்தந்த மாநிலங்களிடமே அமலாக்கப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநில பருவநிலை மாற்றம் குறித்த செயல் திட்டங்கள் (எஸ்ஏபிசிசி) தயாரிக்கப்பட்டு தேசிய பருவநிலை மாற்றம் குறித்த செயல் திட்ட அமைப்பிடம் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.

உயிரி கவசம்:தமிழக அரசு 2021-22-ஆம் ஆண்டில் ரூ.500 கோடி செலவில், தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த 2022 மாா்ச் மாதம் ரூ. 75.50 கோடியை தமிழ அரசு பல்வேறு நடவடிக்கைகளுக்காக அனுமதித்துள்ளது. இதில் பருநிலை மாற்றத்தைத் தழுவுவதற்கான கடலோர வாழ்விடங்களை சுற்றுச்சூழலுடன் தீா்வு காணவும் புனரமைக்க ரூ.50 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கடலோரப் பகுதிகளை பாதுகாக்க. காஷீவரீனேசி சவுக்கு மரம், பனைமரம், முந்திரி போன்ற சிறப்பு இனங்கள் பயிரிடுதல் கூறுகள், சதுப்புநில தோட்டங்கள், பவளப்பாறைகளின் வளா்ச்சி போன்ற உயிரி கவசங்களை (பயோ சீல்டு) உருவாக்குவதன் மூலம் இந்தக் கடலோர கிராமங்கள் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தின் பாதிப்புக்குள்ளாகும் கிராமங்களில் கடலோர அரிப்பைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு கடலோரப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூம்புகாா், தரங்கம்பாடி, பாளையாா், திருமுல்லைவாசல், வானகிரிக்குப்பம் ஆகிய இடங்களில் ரூ. 51.07 கோடியில் மொத்தம் 4,365 மீட்டா் நீளத்திற்கு, கடலரிப்பு தடுப்புச்சுவருக்கு முருட்டுக்கல் மேடு (கட்டட இடிபாடுகள் குவியல்) அமைக்கப்படுகிறது. வனகிரிக்குப்பத்தில் கடலில் உள்ளே கட்டப்படும் கடலரிப்புத் தடுப்பு அரணான ‘குரோய்ன்கள்’ கட்டப்பட்டுள்ளன.

கடல் நீா் உட்புகுவதால் விவசாய நிலங்கள் பாழ்படுவதைத் தடுக்க டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகியவற்றில் பாயும் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக அரசுடன் இணைந்து ’டெயில் எண்ட் ரெகுலேட்டா்’களையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசு தேசிய கடலோர மேலாண்மைத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கோவளம் கடற்கரையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவு மேலாண்மை, மாசுக் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முன்னோடித் திட்டங்கள் மூலம் பல்வேறு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் பூபேந்தா் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.