விஜயா பதிப்பகத்தின் கி.ரா. விருது: எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை தேர்வு!

கோவையில் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் விழாவில், ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் வெ.இறையன்பு கலந்து கொண்டு விருது வழங்குகிறார்.
எஸ்.வி.ராஜதுரை
எஸ்.வி.ராஜதுரை

கோவை: கோவை விஜயா பதிப்பகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கோவை விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம் கூறியிருப்பதாவது:

சாகித்ய விருதுக்குப் பெருமை சேர்த்த கரிசல் இலக்கியத்தின் நாயகன் கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றும் வகையில், கோவை விஜயா பதிப்பகத்தின் ''விஜயா வாசகர் வட்டம்'' சார்பில், ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு    ''கி.ரா."விருது  வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ரூ.5 லட்சம் ரொக்கம், கேடயம் ஆகியவை இந்த விருதுடன் வழங்கப்படுகிறது.

 2023 ஆம் ஆண்டுக்கான ''கி.ரா.'' விருதுக்கு, பிரபல மார்க்சிய, பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கோவையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் விழாவில், ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் வெ.இறையன்பு கலந்து கொண்டு விருது வழங்குகிறார்.

விருதுபெறும் எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, 1940 ஏப்ரல் 10 ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தவர். மனோகரன் என்ற இயற்பெயர் கொண்ட எஸ்.வி. ராஜதுரை லயோலா கல்லூரியில் இடைநிலை வகுப்பு கற்றார்.

கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல், 17 வயதிலிருந்தே குடும்பப் பொறுப்பை ஏற்றார். ஈவெரா பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் தனக்குக் கிடைத்த முதல் பல்கலைக்கழகங்களாகக் கருதினார். 1965 முதல் இந்திய பொதுவுடைமை இயக்கத்தில் அவர் இயங்கி வந்தார்.

பல்வேறு தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், 1965 இல் கோவையில் செயல்பட்டு வந்த "சிந்தனை மன்றத்தில்' செயலர் பொறுப்பு வகித்துள்ளார். 1967 இல் கோவையிலிருந்து வெளிவந்த "புதிய தலைமுறை' மாத ஏட்டில் கோவை ஞானி, புலவர் ஆதி, எஸ்.என்.நாகராஜன் ஆகியோருடன் பணியாற்றினார்.

 "கசடதபற',"பிரக்ஞை' ஆகிய சிற்றேடுகளில் எழுதியுள்ளார். கோவை ஞானியுடன் "பரிமாணம்' என்னும் மார்க்ஸிய ஏட்டின் ஆக்கங்களில்  முக்கியப் பங்கேற்ற அவர், "மார்க்சியம் இன்று' என்ற ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றார். ச.சீ. கண்ணனுடன் (நேத்ரா) இணைந்து 1981இல் சென்னையில் "காரல் மார்க்ஸ் நூலகத்தை' நிறுவினார்.

1982 முதல் 2000 வரை மக்கள் உரிமைக் கழகத்தில் தேசியத் துணைத் தலைவர் பொறுப்பு வகித்து, ராம் ஜெத்மலானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் போன்றோருடன் பணியாற்றினார்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் தலைமையில் இயங்கிவந்த மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தின் அனைந்த்திந்திய அமைப்பாளராகச் செயல்பட்டார். ஆங்கிலத்திலும் சரளமாக எழுதும் திறன் பெற்ற இவர், குறிப்பிடத்தக்க மொழியாக்கங்களைச் செய்துள்ளார்.

 2007, 2008 ஆம் ஆண்டுகளில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், பெரியார் உயராய்வு மன்றத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார்.

எஸ்.வி.ராஜதுரை, பல்வேறு பதிப்பகங்கள் மூலம் 57 நூல்கள், 31 மொழிப்பெயர்ப்பு நூல்கள் என மொத்தம் 88 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் தற்போது, தனது துணைவியாருடன் அன்னூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். 

இதற்கு முன்பு, எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரன், கோணங்கி, அ.முத்துலிங்கம் ஆகியோருக்கு ''கி.ரா.'' விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com