திசையன்விளை இளைஞா் கொலை: 3 ஆவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்

திசையன்விளை இளைஞா் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்தையா கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திருநெல்வேலி சந்திப்பில் மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள்.
முத்தையா கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திருநெல்வேலி சந்திப்பில் மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள்.

திருநெல்வேலி: திசையன்விளை இளைஞா் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை அடுத்த அப்பு விளையைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் முத்தையா (19 கடந்த 23-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். அவா், மாற்று சமூக பெண்ணை காதலித்ததாகவும், அதன் காரணமாகவே ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவருடைய உறவினா்கள் குற்றம்சாட்டினா். ஆனால், மது அருந்தியதில் ஏற்பட்ட பிரச்னையில் அவா் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா். இது தொடர்பாக சுரேஷ், மதியழகன், ஜெயபிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முத்தையா
முத்தையா

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து முத்தையாவின் உறவினர்களும் பல்வேறு கட்சியினரும் உடலை வாங்க மறுத்து திருநெல்வேலி சந்திப்பில் மூன்றாவது நாளாக புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம், சிஐடியு நிர்வாகிகள் மோகன், முருகன், எழுத்தாளர் நாறும்பூநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முத்தையா கொலை வழக்கில் எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். முத்தையா கொலை வழக்கை திசை திருப்ப முயற்சிக்கும் காவல்துறையை கண்டிப்பது, பணியில் இருக்கும் நீதிபதியை கொண்டு வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இது குறித்து கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ், மதியழகன், ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு இந்த கொலையில் சம்பந்தமில்லை. விசாரணை என்ற பெயரில் இரவு நேரத்தில் வந்து போலீசார் அழைத்து சென்று திடீரென கைது செய்துள்ளனர். ஆகவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உண்மை குற்றவாளிகளை கண்டறிய தீவிர விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com