திருச்சி வந்தார் முதல்வர்: திமுக பயிற்சி பாசறை தொடக்கம்!

திமுக பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு இன்று வருகை தந்தார்.
திருச்சி வந்தார் முதல்வர்: திமுக பயிற்சி பாசறை தொடக்கம்!

திருச்சி: திமுக-வின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடிகளுக்குள்பட்ட முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு இன்று(புதன்கிழமை) வருகை தந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் முதல்வருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எஸ். ரகுபதி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சா.சி. சிவசங்கர், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக கட்சியினர் மற்றும் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு, திருச்சி சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார்.

முன்னதாக, ராம்ஜிநகரில் 13 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் திமுக பாசறை பயிற்சிக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தின், தொடக்கமாக திமுக வழக்குரைஞர் அணி செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமாந என்.ஆர். இளங்கோ, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து கட்சியினருக்கு விளக்கிக் கூறினார். திராவிட மாடல் அரசின் அரசின் மக்கள் நலன் காக்கும் சமூக நலத்திட்டங்கள் என்ற தலைப்பில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சா.சி. சிவசங்கர், டி.ஆர்.பி. ராஜா, ஆ.ராசா எம்பி, செயலி பயன்பாடு, கணக்கடுப்பு பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, சமூக வலைதளங்கள் பயன்பாடு குறித்து திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி ஆகியோர் உரையாற்றி வருகின்றனர். 

மாலையில், நடைபெறும் நிகழ்வுக்கு திமுக பொதுச் செயலர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு வரவேறபுரையாற்றுகிறார். இந்த நிகழ்வில், மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தை முன்னிட்டு திருச்சி-திண்டுக்கல் சாலையில் இருபுறமும் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டு, வரவேற்பு பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டம் நடைபெறும் பந்தலில் வாழைமரங்கள், தோரணங்கள், பதாகைகள், பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது கட்-அவுட்டுகளும் இடம்பெற்றுள்ளன. முதல்வர் வருகை மற்றும் கூட்ட நிகழ்வுகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரின் திரும்பிய பக்கமெல்லாமல் திமுக கொடிகளும், தோரணங்களும் காட்சியளிக்கின்றன. 

கார்கில் வெற்றி தினம்: முதல்வருக்கான வரவேற்பு நிகழ்வு முடிந்தவுடன், கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தப்பட்டது. மேஜர் சரவணன் உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், ஆட்சியர், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com