பயிர்களை அழித்த என்எல்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

பயிர்களை புல்டோசர் வைத்து அழித்த என்எல்சி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பயிர்களை அழித்த என்எல்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: நெய்வேலியில் சுரங்கத்திற்காக வாய்க்கால் அமைக்கும் பணிகளின்போது, பயிர்களை புல்டோசர் வைத்து அழித்த என்எல்சி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், புல்டோசர்களை வைத்து பயிர்களை அழித்ததைப் பார்த்தபோது அழுகை வந்ததாகவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்திருந்தார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் சுரங்கத்திற்காக வாய்க்கால் அமைக்கும் பணிகளை என்எல்சி நிர்வாகம் தொடங்கியது. கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, என்எல்சி தரப்பில், நிலத்தின் மதிப்பை விட 3 மடங்கு அதிக இழப்பீடு கொடுக்கப்பட்டிருப்பதாக வாதிடப்பட்டுள்ளது. இதற்கு, நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்கப் போகிறோம் என்று நீதிபதி கூறினார்.

நிலத்தைத் தோண்டி நிலக்கரி, மீத்தேன் என எடுத்துக் கொண்டேயிருந்தால் இந்த வெற்றிடத்தை எப்படித்தான் நிரப்புவது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரிசி மற்றும் காய்கறிக்காக அடித்துக் கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம் என்றும், நெல் அறுடைக் காலம் முடியும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, என்எல்சி தரப்பில், 20 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை தற்போது சுவாதீனப்படுத்துவதற்கு நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று பதிலளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தியது. கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் கொடுத்துள்ளது. ஆனால் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டு இன்னும் இரு மாதங்களில் அறுவடை நடைபெறவிருக்கும் நிலையில்,  சுரங்க விரிவாக்க பணிகளுக்காக வயலுக்குள் புல்டோசரை இறக்கி பணிகளை தொடங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் சுரங்கத்திற்காக வாய்க்கால் அமைக்கும் பணி மற்றும் கால்வாய் வெட்டும் பணி 30-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் புதன்கிழமை காலை தொடங்கியது. இன்னும்  2 மாதத்திற்குள் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யவுள்ள நிலையில், நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு கால்வாய் மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கியதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் சேத்தியாதோப்பு, வளையமாதேவி பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த நிலையில், இன்று என்எல்சி பகுதியில் பாமக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com