திசையன்விளை இளைஞர் கொலை வழக்கு: 6வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்!

திசையன்விளையில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆறாவது நாளாக சனிக்கிழமையும் உடலை வாங்க மறுத்து  போராட்டம் நடைபெற்றது.
திசையன்விளை இளைஞர் கொலை வழக்கு: 6வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆறாவது நாளாக சனிக்கிழமையும் உடலை வாங்க மறுத்து  போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை சாமிதாஸ் நகரைச் சேர்ந்தவர் முத்தையா (19). இவர், கடந்த 23-ஆம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். 

கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தந்தை கன்னியப்பன் தனது மகன் முத்தையா, வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் ஜாதி வெறியில் கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தார்.

ஆனால், இந்த கொலை வழக்கு தனிப்பட்ட விரோதத்தில் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், இது தொடர்பாக சுரேஷ், மதியழகன், ஜெயபிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து முத்தையாவின் உறவினர்களும், பல்வேறு கட்சியினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை முடிந்து ஆறாவது நாளாக சனிக்கிழமையும் முத்தையாவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் திருநெல்வேலில நகரத்தில்  சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் சங்கர பாண்டியன், கணேசன், ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திசையன்விளை இளைஞர் கொலை வழக்கை திசை திருப்ப முயற்சிக்கும் காவல்துறையை கண்டிப்பது, பணியில் இருக்கும் நீதிபதியை கொண்டு வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே முத்தையாவின் சடலத்தை பெற்றுக் கொள்வோம் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com