சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள்: மன்னார்குடியில் தொடரும் அவலம்

மன்னார்குடி நகராட்சி பகுதியில் புதைச் சாக்கடையில் இறங்கி அடைப்பினை நகராட்சி ஒப்பந்த தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் சரி செய்யும் அவலநிலை உள்ளது.  
மன்னார்குடியில் புதைச் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பினை அதில் இறங்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மன்னார்குடி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்.
மன்னார்குடியில் புதைச் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பினை அதில் இறங்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மன்னார்குடி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி பகுதியில் புதைச் சாக்கடையில் இறங்கி அடைப்பினை நகராட்சி ஒப்பந்த தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் சரி செய்யும் அவலநிலை உள்ளது. 
ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் 1869 ஆம் ஆண்டு மன்னார்குடி மாதிரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 1969 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணா தலைமையில் மன்னார்குடி நகராட்சி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது. தற்போது இந்த நகராட்சி 154 வயதை கடந்துள்ளது. மன்னார்குடி நகராட்சியில் 60 ஆண்டுக்கு முன்பே நகரின் கிழக்கு பகுதி மட்டும் குடியிருப்புப் பகுதிகள் கழிவு நீர் புதைச் சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது வார்டு எண்கள் 22,23,25 ஆகியவற்றில் கழிவு நீர் புதைச் சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத் திட்டம் தொடக்கப்பட்ட காலம் முதல் புதைச்சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அதில் இறங்கி அடைப்பினை சரி செய்து வருவது இன்று வரை தொடர் பணியாக இருந்து வருகிறது. 

முன்பு இந்த பகுதியில் இருந்த குடியிருப்புகளின் எண்ணிக்கையின் கவனத்தில் கொண்டு கழிவு நீர் செல்லும் குழாயின் அளவு பொறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வீட்டின் வாசல் ஒரு தெருவில் இருந்தால் வீட்டின் பின் புறம் அடுத்த தெருவில் முடியும் வகையில் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக இந்தபகுதியில் இருந்த பல்வேறு வீடுகள் இடிக்கப்பட்டு காலனி வீடுகளாக மாற்றப்பட்டதால் குடியிருப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததால் கழிவு நீர் அதிக அளவில் வெளியேற்றப்படுவதால் அடிக்கடி கழிவு நீர் சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதும் அதனை நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் இறங்கி சரி செய்தும் வருகின்றனர். 
மன்னார்குடியில் புதைச் சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வரும் நிலையில், மன்னார்குடி எம்எல்ஏவும் தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா முயற்சியால் மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் புதைச் சாக்கடை திட்டம் அமைக்க தமிழக அரசு ரூ.252 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்ததையடுத்து, இதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்றுள்ளது. இப்பணி வருகின்ற 2024 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கப்பட்ட இருக்கிறது. இந்நிலையில், மன்னார்குடி 25 வார்டுக்கு உள்பட்ட ஒத்தைத்தெருவில் ஞாயிற்றுக்கிழமை புதைச் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பினை வழக்கம்போல் சாக்கடையில் இறங்கி நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் சரி செய்யும் விடியோ மற்றும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பரவி பரபரப்பினை ஏற்படுத்தியது. 
இது குறித்து, நகாரட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின்(சிஐடியு சார்பு) கௌரவத் தலைவர் ஜி.ரகுபதி கூறியது, புதைச் சாக்கடையில் மனிதர்களை இறக்கி அடைப்பினை சரி செய்யக் கூடாது என இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றம், மனித உரிமை ஆணையம், தமிழகஅரசு உள்ளிட்டவற்றின் சார்பில் பல்வேறு உத்தரவுகள் இருந்தும் நகராட்சி நிர்வாகம் இயந்திரத்தை வாங்குவதில் அலட்சியமாக இருந்து வருவதுடன் சாக்கடையில் துப்புரவு பணியாளர்களை இறக்கி சரி செய்ய வேண்டும் என வற்புறுத்தி வருகிறது. இது நீண்ட கால பிரச்னையாக இருந்து வருவதால் இதற்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றார். 
தற்போது உள்ள நிலையில், நீண்ட காலத்திற்கு முன் மிகபழமையான திட்டத்தில் போடப்பட்டு நடைமுறையில் உள்ள புதைச் சாக்கடையில் இயந்திரம் மூலம் அடைப்பினை சரி செய்வது என்பது உடனடியாக நடைமுறைக்கு வராத செயலாகும். தற்போதைக்கு மனிதர்களை சாக்கடையில் இறக்காமல் வேறு உபகரணங்களை கொண்டு அடைப்பினை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகஅரசு அறிவித்துள்ள புதைச் சாக்கடை திட்டம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு செயல்படாட்டுக்கு வந்தால் மட்டும் தான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றனர் சமூக ஆர்வலர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com