உயிர்தப்பிய பயணிகளுடன் சென்னை வந்தடைந்தது சிறப்பு ரயில்!

ஒடிஸா ரயில் விபத்தில் உயிர்தப்பிய 133 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர்.
உயிர்தப்பிய பயணிகளுடன் சென்னை வந்தடைந்தது சிறப்பு ரயில்!
Updated on
1 min read

ஒடிஸா ரயில் விபத்தில் உயிர்தப்பிய 133 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர்.

ஒடிஸா மாநிலத்தின் பாலசோா் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹௌரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த நிலையில், விபத்திலிருந்து மீட்கப்பட்டவா்கள் விமானம் மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இதில், முதல்கட்டமாக புவனேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை காலை 8.40 மணிக்கு புறப்பட்ட ரயிலில் 190 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் பொ்காம்பூரில் 4 பேரும், விசாகப்பட்டினத்தில் 41 பேரும், ராஜமுந்திரியில் ஒருவரும், விஜயவாடாவில் 9 பேரும், தடேபல்லிகுதேமில் 2 பேரும் இறங்கினா். மீதமுள்ள 133 பயணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்தடைந்தனர்.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் மருத்துவத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பயணிகளை நேரில் சென்று வரவேற்றனர்.

தொடர்ந்து, சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் அவசர சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்டுள்ள 30 மருத்துவர்கள் பயணிகளை முதல்கட்ட பரிசோதனை செய்து வருகின்றனர். 

மேலும், சிகிச்சை தேவைப்படும் பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

இதுவரை யாருக்கும் அதிதீவிர சிகிச்சை தேவை இல்லை. 8 பேர் மட்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த யாரும் இதுவரை உயிரிழந்ததாக தகவல்கள் இல்லை. ரயில் நிலையத்தை போன்று விமான நிலையத்திலும் மருத்துவக் குழு நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com