தமிழகத்தில்தான் மின்கட்டணம் குறைவு: முதல்வர் ஸ்டாலின்

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated on
1 min read


திருச்சி: நாட்டில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான மின்சாரம் உயர்த்தப்படாது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டங்கள் தொடரும் என்றும் கூறினார்.

மேலும், அதிமுக ஆட்சியில்தான் மின் கட்டணம் செங்குத்தாக உயர்த்தப்பட்டது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உதய் திட்டத்தில் அதிமுக கையெழுத்திட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உதய் திட்டத்தில்  அதிமுக கையெழுத்திட்டதால் ஏற்படும் பாதிப்புகளை நாம் இப்போது சந்தித்து வருகிறோம் என்றார் முதல்வர்.

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில்,  டெல்டா மாவட்டங்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக தி.மு.க அரசு செயல்படும். பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படாததற்கு ஆளுநர் தான் காரணம் என உயர்கல்வி துறை அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அதே குற்றச்சாட்டை நானும் வைக்கிறேன். இது போன்ற பிரச்னைகளுக்காக தான் பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

மேகதாது அணை விவகாரத்தில் அணைக் கட்ட கூடாது என எப்படி கலைஞர் உறுதியாக இருந்தாரோ அதே உறுதியோடு நாங்கள் இருக்கிறோம். விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்துவது ஆய்வில் உள்ளது. 

டெல்டா மாவட்ட்டங்களில் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள் 96 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் ஒரு சில நாட்களில் நிறைவடையும்.

மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று விட்டது. அவர்கள் கூறிய சிறிய குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விட்டது. தமிழக ஆளுநர் பல்வேறு மசோதாக்களை  நிறுத்தி வைத்திருப்பதால் தமிழக அரசு  நீதிமன்றத்தை நாடலாம் என சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

ஆளுநரை மாற்ற கோரிக்கை வைப்பீர்களா என்ற கேள்விக்கு நாங்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் இந்த பிரச்னை இல்லை. தமிழக அமைச்சரவையில் மாற்றம் உள்ளதா? உதயநிதி, துணை முதல்வர் ஆவாரா என்ற கேள்விக்கு இப்போதைக்கு வரும் சேதி மத்திய அரசில் தான் அமைச்சரவை மாற்றம் இருப்பதாக சேதி வருகிறது என்றார்.

அமுல் நிறுவனம் தமிழகத்தில் வருவதை எதிர்க்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம். ஆவின் நிறுவனத்தில் சிறுவர்கள் வேலை செய்வது குறித்து அத்துறை அமைச்சர் மறுத்துள்ளர். மேலும் அந்தக் காட்சிகள் போலியாக சித்தரித்து வெளியிடப்பட்டது என முதல்வர் பதிலளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com