காத்திருப்போர் பட்டியலில் பல்லடம் சார் பதிவாளர்கள்: காரணம் என்ன?

பல்லடம் சார் பதிவாளர்களாக பணியாற்றி வந்த பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகியோரை கோவை மேற்கு மண்டல காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து பதிவுத்துறை துணை தலைவர் சாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பல்லடம்: பல்லடம் சார் பதிவாளர்களாக பணியாற்றி வந்த பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகியோரை கோவை மேற்கு மண்டல காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து பதிவுத்துறை துணை தலைவர் சாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் 39 கிராமங்கள் அடங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் பத்திரப்பதிவு மூலம் அதிகப்படியான வருவாய் தரும் பகுதிகளில் பல்லடமும் ஒன்று. பத்திரப்பதிவாளர்களான பிரவீனா, ஈஸ்வரி ஆகியோர் சமீபத்தில் திருப்பூரில் இருந்து பணி மாறுதலாகி பல்லடம் வந்துள்ளனர். 

இவர்கள் வந்தபின் லஞ்சம் அதிகரித்தாக பத்திர எழுத்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் திங்கள்கிழமை   முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு பத்திரப்பதிவு பணிகள் நடைபெறாது என பல்லடம் பகுதி பத்திர ஆவண எழுத்தர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்ததன் எதிரொலியாக பத்திரப்பதிவு துறை மேற்கு மண்டல டிஐஜி சாமிநாதன், பல்லடம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலக சார்பதிவாளர்கள் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திங்கள்கிழமை முதல் அறிவித்தபடி பத்திர எழுத்தர்கள்  வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 

திங்கள்கிழமை வழக்கமாக நாள் ஒன்றுக்கு 120 பத்திரங்கள் பதிவாகும் நிலையில், 12 பத்திரங்கள் மட்டுமே திங்கள்கிழமை பதிவாகின. மேலும் தொடர்ச்சியாக சனிக்கிழமை வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பத்திர எழுத்தாளர்கள் அறிவித்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பல்லடம் சார் பதிவாளர்களாக பணியாற்றி வந்த பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகியோரை கோவை மேற்கு மண்டல காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து பதிவுத்துறை துணை தலைவர் சாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும், திருப்பூர் வழிகாட்டி சார் பதிவாளராக பணியாற்றி வந்த பெருமாள் ராஜா மற்றும் சூலூரில் பணியாற்றி வந்த பூபதி ராஜா ஆகியோரை பல்லடம் சார் பதிவாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கு வரவேற்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்திர எழுத்தர்கள் புதிதாக நியமனம் செய்யபட்ட இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சார் பதிவாளர்களை மாற்றம் செய்துமைக்காக மேற்கு மண்டல பதிவுத்துறை துணை தலைவர் சாமி நாதன் மற்றும் தமிழக முதல்வருக்கு பத்திர எழுத்தர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com