தமிழகத்தை மையமாக வைத்து சர்வதேச நாடுகளுக்கு கஞ்சா கடத்தும் கும்பல்

தமிழகத்தை மையமாக வைத்து இலங்கை வழியாக சர்வதேச நாடுகளுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக உளவுத் துறை எச்சரித்தது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகத்தை மையமாக வைத்து இலங்கை வழியாக சர்வதேச நாடுகளுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக உளவுத் துறை எச்சரித்தது.
 தமிழகம் முழுவதும் கஞ்சா கடத்தல், விற்பனையைத் தடுக்க அரசு உத்தரவிட்டது.
 இதைத் தொடர்ந்து, கஞ்சா கடத்தல், விற்பனையைத் தடுக்கும் வகையில் காவல் துறை சார்பில், "வேட்டை 4.0' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 இதன் ஒரு பகுதியாக மதுரை நகர் காவல் துறையினர், சுற்றுச்சாலையில் நடத்திய வாகன சோதனையில், காரில் கடத்தப்பட்ட 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி பகுதியில் இருந்து 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை மொத்தமாக வாங்கி, போலியான பதிவெண் கொண்ட சரக்குப் பெட்டக வாகனத்தின் மூலம் கடத்தி வந்ததும், அதை இலங்கைக்குக் கடத்துவதற்காக, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் புதுக்குளம் கிராமத்தில் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
 இதையடுத்து, மாநகரக் காவல் துறை சார்பில் தனிப் படை அமைக்கப்பட்டது. தென் மண்டல காவல் துறைத் தலைவர் அஸ்ராகார்க், தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் வேலவன் புதுக்குளம் கிராமத்தில் தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,090 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, மதுரைக்குக் கொண்டு வந்தனர். மேலும், கஞ்சா கடத்தல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
 மத்திய, மாநில உளவுத் துறை விசாரணை: ஆந்திரத்தில் இருந்து தூத்துக்குடி வரை நூற்றுக்கும் மேற்பட்ட காவல் சோதனை சாவடிகள், சுங்கச் சாவடிகள் உள்ள நிலையில், போலீஸாருக்கு தெரியாமல் 2,090 கிலோ கஞ்சா தூத்துக்குடி கொண்டு செல்லப்பட்டது எப்படி என்பது குறித்து மாநில, மத்திய உளவுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 இந்த நிலையில், மத்திய உளவுத் துறையினர் நடத்திய விசாரணையில், சர்வதேச நாடுகளுக்கு கஞ்சா கடத்திச் செல்வதற்கான சாதகமான மாநிலமாக கடத்தல்காரர்கள் தமிழகத்தைப் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.
 இதுதொடர்பாக உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
 நாட்டிலேயே ஆந்திரத்தில்தான் அதிக அளவில் கஞ்சா பயிரிடப்படுகிறது. ஆந்திரம், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் இல்லாததால், அங்கு கஞ்சா பயிரிடப்படுவது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. மேலும் அதிக அளவில் பணம் கிடைப்பதால் பெண்களும் கஞ்சாவைப் பயிரிட்டு, விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதை அந்த மாநில காவல் துறையினரால் தடுக்க முடியவில்லை. மேலும் ஆந்திரத்தைச் சேர்ந்த பெண்கள் ரயில், பேருந்துகள் மூலம் தமிழகத்துக்கு கஞ்சாவைக் கடத்தி வந்து தருகின்றனர். இதற்காக கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் கூலியாக வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி சர்வதேச நாடுகளுக்கு கஞ்சா கடத்திச் செல்லப்படுகிறது.
 ஆந்திரத்தில் ஒரு கிலோ ரூ.15 ஆயிரத்துக்கு விற்கப்படும் கஞ்சா, தமிழகத்தில் கிலோ ரூ.35 ஆயிரத்துக்கும், இலங்கையில் ரூ.ஒரு லட்சத்துக்கும், வெளிநாடுகளில் ரூ.3.50 லட்சத்துக்கும் விற்கப்படுகிறது.
 இதனால் ஆந்திரத்தில் இருந்து மொத்தமாக கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி, அதை சரக்குப் பெட்டகம், காய்கறி வாகனங்கள், ரயில்கள் மூலம் தமிழகத்துக்குக் கடத்தி வரப்படுகிறது. தமிழகம் நீண்ட கடலோரப் பகுதிகளைக் கொண்டிருந்தாலும்கூட, தூத்துக்குடி மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் உள்ளது. மேலும், தூத்துக்குடியில் துறைமுகத்தில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள், கடல் ரோந்துகள் இருக்காது என்பதால், இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்கு ஏதுவான பகுதியாக கடத்தல்காரர்கள் தூத்துக்குடியை அடையாளம் கண்டுள்ளனர்.
 எனவே, ஆந்திரத்திலிருந்து கொண்டுவரப்படும் ஆயிரக்கணக்கான கிலோ கஞ்சாவை கடலோரப் பகுதிகளில் உள்ள தோப்புகளில் பதுக்கி வைத்திருந்து, குறிப்பிட்ட நாள்களில் வரும் படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்திச் சென்று விடுகின்றனர். இலங்கையில் தற்போது பெரிய அளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருவதால், கடத்தல் கும்பல் இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு கஞ்சாவை கடத்திச் செல்கின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்படுகிறது. கடத்தல்காரர்கள் ஆந்திரம், தமிழகம், இலங்கை, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் அடங்கிய சர்வதேச வலைப்பின்னலைக் கொண்டுள்ளனர்.
 இதுபோல, ஏற்கெனவே பலமுறை இலங்கைக்கு ஆயிரக்கணக்கான கிலோ கஞ்சா கடத்திச் செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. தற்போதும் கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபர்கள் சிக்கவில்லை. கூலிப்படையினர் மட்டுமே பிடிபட்டுள்ளனர்.
 எனவே, கஞ்சா கடத்தலைத் தடுக்க தமிழகக் காவல் துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும். சர்வதேச நாடுகளுக்கு கஞ்சா கடத்துவதற்கு ஏதுவாக தமிழகம் இருப்பது மாநிலத்தின் நலனுக்கு உகந்ததல்ல என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com