குரூப் 4 தேர்வு காலியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், கரோனா தொற்று காரணமாக 2019, 2020, 2021 ஆகிய மூன்று ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் எந்த தேர்வும் நடைபெறவில்லை. கரோனா தொற்று குறைந்த பிறகு கடந்தாண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியிடப்பட்டு குரூப் -1, குரூப் - 2, குரூப் 2ஏ, குரூப் - 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. குரூப்- 4 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவு  இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. குரூப் - 4க்கான காலிப் பணியிடங்கள் 10,117 என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 என்கிற அளவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல், கடந்த ஆண்டுதான் தேர்வு நடத்தப்பட்டு இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்வுகள் நடத்தப்படாத காரணத்திலும், ஓய்வு பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், கொரேனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பினை இழந்த இளைஞர்கள் அரசுப் பணிக்கு முயற்சித்து வருவதாலும் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்பொழுது விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்திற்கு அதிகமாகவும் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்திற்கு அதிகமாகவும் உள்ளது.

அரசுப்பணியில் சேர இளைஞர்களுக்கான பிரதான வாய்ப்பாக இருப்பது டிஎன்பிஸ்சிதான். கரோனா காலத்தில் அறிவிக்கப்படாத பணியிட வாய்ப்புகள் மற்றும் உருவாகியிருக்கும் கூடுதல் காலிப் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால் தற்போது மூன்றரை லட்சத்திற்கு மேல் காலிப் பணியிடங்கள் உள்ளன.  இதை தற்போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மூன்று  சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களான மின்சாரம், போக்குவரத்து, ஆவின் போன்ற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், சமீபத்தில் குரூப்-4 தேர்விற்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் இடம் பெறவில்லை என்பது அந்த இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையும் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக முதல்வர், தமிழகத்தில் 3.5 லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், கரோனா காலத்தில் அறிவிக்கப்படாத பணியிட வாய்ப்புகள் மற்றும் உருவாகியிருக்கும் கூடுதல் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலிப் பணியிடங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்காலத்தில் நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அதேசமயம், தற்போது அறிவிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 10,000 காலிப்பணியிடங்களை குறைந்தபட்சம் 20,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டுமென கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com