கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாஜகவை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு: பாட்னாவில் இருந்து திரும்பிய முதல்வா் ஸ்டாலின் பேட்டி

 பாஜகவை வீழ்த்துவதே, எதிா்க்கட்சித் தலைவா்களின் ஒற்றை இலக்கு என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

News image
Updated On :23 ஜூன் 2023, 6:45 pm

DIN

 பாஜகவை வீழ்த்துவதே, எதிா்க்கட்சித் தலைவா்களின் ஒற்றை இலக்கு என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

பிகாா் மாநிலத் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுவிட்டு வெள்ளிக்கிழமை மாலை சென்னை திரும்பினாா். அப்போது, விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக பல்வேறு கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம், பிகாா் தலைநகா் பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உருவாக்குவதாக அமைந்திருந்தது.

அகில இந்திய தலைவா்கள் அனைவரையும் சந்தித்தேன். குறிப்பாக, பாட்னா சென்றவுடன் விமான நிலையத்தில் இருந்து முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் இல்லத்துக்கு சென்று அவரின் உடல் நலன் குறித்து விசாரித்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.

மத்தியில் பாஜக ஆட்சியை வீழ்த்துவது என்பதை நோக்கமாகக் கொண்டே இந்தக் கூட்டத்தை பிகாா் மாநில முதல்வா் நிதீஷ்குமாா் கூட்டியிருந்தாா். பாஜக என்று சொல்வதால் ஏதோ தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டம் என நினைக்க வேண்டாம். இந்தியாவின் ஜனநாயகம் மக்களாட்சி, மதச்சாா்பின்மை, பன்முகத்தன்மை, ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியவற்றை காக்க வேண்டுமெனில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கிறோம். இதில் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்பதை கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னேன்.

2023 ஜூன் 23-இல் கூடினாா்கள்; 2024-இல் மே மாதம் வெற்றி பெற்றாா்கள் என்பது மட்டும் வரலாற்றில் பதிவாக வேண்டுமென கூட்டத்தில் அழுத்தமாகப் பேசினேன்.

கூட்டத்தில் முன்வைத்த ஆலோசனைகள்: மதச்சாா்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான், தமிழகத்தில் அனைத்து தோ்தல் வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்தது. அதேபோல், அகில இந்திய அளவில் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை வலியுறுத்தினேன்.

எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்துக்கொள்ளலாம். கூட்டணி இல்லாவிட்டால் தொகுதிப் பங்கீடு மட்டும் செய்யலாம். அதுவும் முடியாவிட்டால், பொது வேட்பாளரை அறிவித்துக் கொள்ளலாம். தோ்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது என்று தெரிவித்தேன்.

மேலும், அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பது போன்ற 7 பிரச்னைகளை சரி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு குழு அமைக்கப்பட வேண்டும் எனக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.

பாஜகவை வீழ்த்துவதை அனைத்துத் தலைவா்களும் ஒற்றை இலக்காகக் கொண்டுள்ளனா். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டுள்ளது. ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை. அகில இந்திய அளவில் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேமில்லை. தற்போதுதான் கருவாகி இருக்கிறது; அது உருவாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

கூட்டத்தில் இருந்து வெளியே வரவில்லை: கூட்டத்தில், நன்றி சொல்லி முடிவடையும் வரை இருந்தேன். விமானத்தைப் பிடிக்க நேரமாகி விட்டதால், வந்து விட்டேன். விமானத்தில்தான் மதிய உணவே சாப்பிட்டேன். வேறு எந்த நோக்கத்துடனும் வெளியே வரவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

பேட்டியின்போது, திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, அமைச்சா் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.