ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மேட்டூர் அணை நீர் பற்றாக்குறை: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், வாய்க்கால்கள்-வயல்களுக்கு சென்றடையாததால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :27 ஜூன் 2023, 10:00 pm

பா.லெனின்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், வாய்க்கால்கள்-வயல்களுக்கு சென்றடையாததால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 குறுவை சாகுபடிக்காக தண்ணீர் வரத்தை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்புச் செய்த சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பயிர் கருகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கடும் அச்சத்துடன் உள்ளனர்.
 காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி நடைபெறும். மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். அதன் பின்னர் அதே பரப்பளவில் தாளடிசாகுபடி நடைபெறும். இந்த சாகுபடிகள் ஜூன் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். நீண்ட நாள் பயிரான சம்பா சாகுபடி (ஒருபோக சாகுபடி) சுமார் 12 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.
 கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் உரிய நேரத்தில் திறக்கப்பட்டு, போதுமான அளவில் தண்ணீர் கிடைத்ததால் வரலாறு காணாத வகையில் நெல் மகசூல் அதிகமாக கிடைத்து வருகிறது.
 நிகழாண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால், வழக்கம் போல் ஜூன் 12-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையைத் திறந்து வைத்து ரூ.76 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டத்தையும் அறிவித்தார். வேளாண்துறை அமைச்சரும் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறும் என பெருமிதத்துடன் தெரிவித்தார். உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் உற்சாகத்துடன் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 தண்ணீரைக் காணாத வயல்கள்: அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக டெல்டா மாவட்டங்களை அடைந்தாலும், ஆறுகளில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. பல வாய்க்கால்களைத் தண்ணீர் எட்டிப் பார்க்காததால் வயல்களில் விதை நெல் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 15 நாள்களாகியும் தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 கருகும் விதை நெல்கள்:
 உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என அறிந்த டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி பரப்பளவில் பாதிக்கும் மேல் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். ஆனால், விவசாயிகள் எதிர்பார்த்தது போன்று மழைப் பொழிவு இல்லை. இதுபோன்ற நேரங்களில் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரை வயலுக்கு பயன்படுத்தி விதை நெல்லை முளைக்கச் செய்வர். தற்போது அதற்கும் வழியில்லாததால், அதிக வெப்பநிலையில் விதை நெல்கள் கருகி வருகின்றன.
 பறவைகளுக்கு இரையாகும் விதை நெல்கள்: தண்ணீரின்றி முளைப்புத் தன்மையை விதை நெல்கள் இழந்து வருகின்றன. அது மட்டுமின்றி வயல்களில் நேரடியாகத் தெளிக்கப்பட்ட விதை நெல் மயில்கள், புறாக்களுக்கு இரையாகி வருகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 விவசாயிகள் குற்றச்சாட்டு: மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் திறக்கப்படும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறப்பதில் அலட்சியமாகச் செயல்படுவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆளும் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் போன்றோர் குறிப்பிடும் பகுதிகளுக்கு அதிக தண்ணீர் திறந்துவிடுவது, தண்ணீர் தேவையிருக்கும் பகுதிகளுக்கு குறைவான தண்ணீர் வழங்குவது என அலட்சிய போக்கை அதிகாரிகள் கையாளுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 இழப்பைச் சந்திக்கும் விவசாயிகள்: நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட சுமார் 1 லட்சம் ஏக்கர் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், நெல் மற்றும் விதைப்புக்காக ஏக்கருக்கு செலவு செய்த ரூ.1,500 முதல் ரூ. 2,000 என சுமார் ரூ.15 கோடி இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறும் விவசாயிகள், உடனடியாக கூடுதலாக தண்ணீர் திறந்து விதை நெல்களைக் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அதிகாரிகள் விளக்கம்: நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, மேட்டூர் அணையிலிருந்து தற்போது திறக்கப்படும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து தற்போது 13,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போதிய அளவில் தென்மேற்குப் பருவமழையில்லாததால், அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அதிகளவில் தண்ணீர் திறந்தால் ஒரு மாதத்தில் தண்ணீர் தீர்ந்துவிடும். கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் பெறுவதில் சிக்கல் உள்ளது என்றனர்.
 இந்தப் பிரச்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு கர்நாடகத்திடமிருந்து கூடுதல் தண்ணீரைப் பெற்று டெல்டா விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருப்பதால், கூடுதல் தண்ணீரைப் பெறத் தேவையான அழுத்தம் தர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.