ஈரோடு கிழக்கு: முதல் சுற்றில் தேமுதிகவை முந்திய சுயேச்சை

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானதில், தேமுதிக வேட்பாளரை விட, சுயேச்சை வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார்.
ஈரோடு கிழக்கு: முதல் சுற்றில் தேமுதிகவை முந்திய சுயேச்சை
ஈரோடு கிழக்கு: முதல் சுற்றில் தேமுதிகவை முந்திய சுயேச்சை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானதில், தேமுதிக வேட்பாளரை விட, சுயேச்சை வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்தத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால் முடிவுகள் தாமதமாக வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகளைப் பெற்றிருந்தார். சுயேச்சை வேட்பாளர் முத்துபாலா 176 வாக்குகள் பெற்றிருந்தார்.

 ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

 திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு பிப்.27 -ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவு சதவீதம் 74.79.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. "77 வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக, தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படும். பிற்பகலுக்குப் பிறகுதான் முடிவுகள் தெரியவரும். இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாக மாலையில் அறிவிக்கப்படும்' என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com