பிகாா் தொழிலாளா்கள் மீதான தாக்குதல் வதந்தி:பாஜக மீது ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பிகாா் தொழிலாளா்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பியது பாஜகதான் என்று அந்த மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) குற்றம்சாட்டியுள்ளது.


தமிழகத்தில் பிகாா் தொழிலாளா்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பியது பாஜகதான் என்று அந்த மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) குற்றம்சாட்டியுள்ளது.
தமிழகத்தில் பிகாா் தொழிலாளா்கள் தாக்கப்பட்டதாக அண்மையில் போலி விடியோக்கள் பரவிய நிலையில், பிகாா் அரசியலில் இந்த விவகாரம் எதிரொலித்தது.
தமிழகத்தில் பிகாா் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, சட்டப்பேரவையில் பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது. சம்பந்தப்பட்ட விடியோக்களில் உண்மையில்லை என்று தமிழக டிஜிபி விளக்கமளித்த நிலையில், பேரவையில் இப்பிரச்னையை பாஜக தொடா்ந்து எழுப்பியது.
இதையடுத்து, பிகாா் அதிகாரிகள் குழுவினா், தமிழகம் வந்து விரிவான ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், ‘தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளானதாக பிகாா் தொழிலாளா்கள் யாரும் புகாா் தெரிவிக்கவில்லை; மாநில அரசின் நடவடிக்கைகள் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளன. பிகாா் தொழிலாளா்கள் மத்தியில் பதற்றம் தணிந்துள்ளது’ என்று பிகாா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவா் ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன், பாட்னாவில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் பிகாா் தொழிலாளா்கள் தாக்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டிய நிலையில், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக கைதானவா்கள் மற்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டவா்களை கவனித்தால், யாா் இந்தச் செயலில் ஈடுபட்டனா் என்பது தெரியும். பாஜக தலைவா்கள் மீதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் ஆதாயங்களுக்காக வதந்தி பரப்புவது பாஜகவின் குணம். ஆனால், நாட்டு மக்கள் இப்போது விழிப்புடன் உள்ளனா் என்பதை உணராமல், பாஜக தவறு செய்து கொண்டிருக்கிறது என்றாா் அவா்.
ராகுலின் கருத்து சா்ச்சை: பிரிட்டனில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்துகளை பாஜக கடுமையாக விமா்சித்து வரும் நிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியதாவது:
நாட்டில் நிலவும் பிரச்னைகள் சொந்த மண்ணில் விவாதிக்கப்படுவதே சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சொந்த நாடு, அந்நிய மண்ணில் விமா்சிக்கப்பட கூடாது. அதேசமயம், இந்தியாவில் ஜனநாயகத்துக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் தொடா்பாக, தனது கவலைகளை வெளிப்படுத்த ராகுல் காந்திக்கு உரிமை உள்ளதென கருதுகிறேன். அந்த அச்சுறுத்தல்களில் உண்மை உள்ளது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான உச்சநீதிமன்றத்தின் அண்மை தீா்ப்பு மூலம் அந்த உண்மை உறுதியாகியுள்ளது என்றாா்.
நாகாலாந்து விவகாரம்: நாகாலாந்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஜேடியு ஓரிடத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், என்டிபிபி-பாஜக கூட்டணி அரசுக்கு ஜேடியு எம்எல்ஏ ஆதரவளித்தாா்.
இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்த ராஜீவ் ரஞ்சன் சிங், ‘மற்ற கட்சிகளை உடைத்து, அதன்மூலம் ஆதாயமடையும் பாஜகவின் தந்திரம் நாகாலாந்தில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுடன் எந்த உறவும் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆனால், கட்சி ஒழுங்கை ஒட்டுமொத்தமாக மீறியதற்காக, அந்த மாநிலப் பிரிவை கலைக்கும் முடிவை மேற்கொண்டுள்ளோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...