பால் விலை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்!

கறவை மாடுகளுடன் வந்து வாழப்பாடியில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழப்பாடியில் கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்.
வாழப்பாடியில் கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்.


வாழப்பாடி: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி, கருப்புக் கொடியேற்றியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழப்பாடியில் கறவை மாடுகளுடன் வந்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 வழங்க வேண்டும். ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்து தர வேண்டும். கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்கிட வேண்டும். காலதாமதமின்றி, பண பட்டுவாடா செய்ய வேண்டும். பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணி வரையறை செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் கடந்த 10-ஆம் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் வழக்குரைஞர் வாழப்பாடி ராஜேந்திரன் தலைமையிலான நிர்வாகிகளுடன் சென்னை  தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் நேற்று  பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாததால், மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

வாழப்பாடி புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்,  இன்று வெள்ளிக்கிழமை காலை, மாநில தலைவர் வழக்கறிஞர் வாழப்பாடி ராஜேந்திரன் தலைமையில்  விவசாயிகள், கறவை மாடுகளுடன் வந்து, பால் உயர்வை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆவின் கூட்டுறவு நிறுவனத்தின் பொது மேலாளர் விஜய்பாபு,  மாவட்ட பால் கூட்டுறவு பதிவாளர் செந்தில்குமார், துணை பொது மேலாளர் மாலதி ஆகியோர், வாழப்பாடி பால் கூட்டுறவு சங்கத்தில் முகாமிட்டு பால் கொள்முதலை  ஆய்வு செய்தனர்.

'விவசாயிகளின் விலை உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் போராட்டதினால் பால் கொள்முதல் அளவு குறையவில்லை. விவசாயிகள் தொடர்ந்து அரசு பால் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கி வருகின்றனர் என,  சேலம் ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு தெரிவித்தார். 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:

பால் மற்றும் பால் சார்ந்த  பொருட்களுக்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றன. ஆனால், ஆவின் கூட்டுறவு நிறுவனம் விவசாயிகளுக்கு குறைந்த விலை கொடுத்து ஏமாற்றி வருகிறது. தமிழகம் முழுவதும் 9,000 பால் கூட்டுறவு சங்க விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

எனவே, பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக அரசு பால் விலையை லிட்டருக்கு ரூ.7  உயர்த்தி கொடுத்து பால் உற்பத்தியாளர், விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com