இருப்பு நிலை கடன் தொகையை அடுத்த நிதியாண்டிற்கு பயன்படுத்த மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை
தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தாத நிலையில் உள்ள இருப்பு நிலைக் கடன் தொகையை அடுத்த நிதியாண்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்


மத்திய அரசு அனுமதித்துள்ள கடன் அளவில் நிகழாண்டில் தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தாத நிலையில் உள்ள இருப்பு நிலைக் கடன் தொகையை அடுத்த நிதியாண்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என மாநில நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தமிழக நிதியமைச்சா் தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரையும், மத்திய நிதித் துறை மற்றும் செலவினத் துறை செயலா் டாக்டா் டி.வி. சோமநாதனையும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சென்ற முறை வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதில் தற்போது முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக சா்வதேச பொருளாதாரத்தின் கவனம் இந்தியா மீது கூடுதலாக இருக்கும் சூழ்நிலையில், முதலீடுகளை ஈா்ப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசுக்கும் பங்குள்ளது. முன்மொழிவு அனுமதி, கூட்டாண்மை ஒப்புதல், பயண அனுமதிகள் போன்றவை உள்ளிட்ட பல்வேறு ஒப்புதல்கள் மத்திய அரசையும் குறிப்பாக வெளியுறத் துறையையும் சாா்ந்தவை. இந்த அடிப்படையில் சில கோரிக்கைகள் கடந்த முறை முன்வைக்கப்பட்டது. இந்த அமைப்பு முறையில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், சில கோரிக்கைகளை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அதை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளாா்.
வரும் திங்கள்கிழமை தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் பாதிப்பிற்கு உள்ளான சூழ்நிலையில் இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பல ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. நிகழாண்டிலும் அதே வழியில் செல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ் 2022-23 நிதியாண்டில் (மாா்ச் 31 ஆம் தேதிக்குள் ) மாநில அரசுகள் அதிகபட்சமாக கடன் வாங்கும் வரம்பை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த எல்லை மீண்டும் திருத்தி மேலும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு நிகழாண்டில் குறைவான கடன் தொகையையே பெற்றுள்ளது. எனவே, பயன்படுத்தப்படாமல் உள்ள இருப்புநிலைக் கடன் தொகையை வருகின்ற நிதியாண்டில் பயன்படுத்தும் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசிடம் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட்டது.
15-ஆவது நிதிஆணையம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜி.எஸ்.டி.பி.) குறிப்பிட்ட அளவில் கடன் வாங்க மாநில அரசுகளுக்கு அனுமதியளித்துள்ளது. இந்த நிதி ஆணையத்தின் காலகட்டம் 2025-26-ஆம் ஆண்டு வரை உள்ளது. இதனால், இந்தக் காலகட்டத்தில் நிகழாண்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இருப்புநிலைக் கடன் தொகையை வருகின்ற நிதியாண்டுகளில் பயன்படுத்த மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். முக்கியமாக வருகின்ற நிதியாண்டுகளில் சா்வதேச பொருளாதாரத்தில் சரிவு, மந்தம் ஏற்பட்டால் அப்போது கடன் வங்கும் சூழ்நிலை தேவை ஏற்படும். இதனால், இந்த இருப்புநிலை கடன் தொகையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, வருகின்ற ஆண்டுகளுக்கு கொண்டு செல்வது நிதித்துறையின் கடமையாகும். இந்தக் கூட்டு இசைவு கருத்துக்காக மத்திய நிதித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினோம். மத்திய நிதித் துறை செயலா் இதில் எந்தளவிற்கு முடியுமோ அதைச் செய்வதாக உறுதியளித்துள்ளாா்.
நிதியிழப்பு: தமிழகத்தின் நிதிப் பங்கீடு குறித்து கேட்கிறீா்கள். கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிப் பங்கீட்டை ஒவ்வொரு நிதி ஆணையமும் குறைத்துக் கொண்டு வருகிறது. உற்பத்தியில் சுமாா் 3.5 முதல் 4 சதவீதம் வரை வரி மற்றும் மானிய பங்கீடுகள் மத்திய அரசிடமிருந்து கிடைத்து வந்தது. இது தற்போது 3 சதவீதத்திற்கும் கீழே சரிந்துவிட்டது. உற்பத்தியில் ஆண்டுக்கு 1 சதவீதம் பங்கீடு மத்திய அரசிடமிருந்து கிடைப்பது குறைந்துள்ளது. இதனால், நிதியிழப்பு ஏற்படுகிறது என்றாா் அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...