கடந்த ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்காமல் திட்டங்கள் அறிவிப்பு: அமைச்சர் குற்றச்சாட்டு 

கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிதி ஒதுக்கப்படாமல் அறிவிக்கப்பட்டன. அதற்கெல்லாம் நாங்கள் இப்பொழுது நிதி ஒதுக்கி வருகிறோம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.            
அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி.
அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி.

கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிதி ஒதுக்கப்படாமல் அறிவிக்கப்பட்டன. அதற்கெல்லாம் நாங்கள் இப்பொழுது நிதி ஒதுக்கி வருகிறோம் என்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.             

ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர் சிகிச்சை சிறப்பு பிரிவு கட்டடத்தை செவ்வாய்க்கிழமை அவர்  பார்வையிட்டார்.  பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியது: 

கட்டடப் பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டன. ரூ. 67 கோடி மதிப்பிலான  கட்டடப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அது தரமாக கட்டப்பட்டுள்ளதா என்று நான் ஆய்வு செய்ய வந்துள்ளேன். இந்த  மருத்துவமனையில் எலும்பு முறிவு, மார்பக சிகிச்சை நோய்கள் குறித்த தனிப் பிரிவுகள் உள்ளன. இங்கு மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வேண்டிய வசதிகள் உள்ளனவா என்று ஆய்வு நடத்தப்பட்டது. 

விரைவில் இது சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். மருத்துவமனை சுற்றியுள்ள பகுதியில் வாகன நிறுத்தம் ஏற்படுத்தவும் மருத்துவமனையை ஒட்டி உள்ள மேம்பாலத்திற்கு அணுகு சாலை  அமைக்கவும் மீண்டும் ஆய்வு நடத்த வர உள்ளேன். ஈரோடு முதல் திண்டல் வரை மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த ஆட்சி அறிவிப்பு செய்தது. 

இதேபோன்று பல்வேறு திட்டங்கள் உரிய மதிப்பீடு  திட்ட ஆய்வு செய்யப்படாமல் அறிவிக்கப்பட்டுள்ளன. எனது நெடுஞ்சாலை துறையில் மட்டும் நடப்பாண்டில் ரூ. 18,000 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 13000 கோடி கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட திட்டத்திற்கு ஒதுக்கி உள்ளேன்.  எங்களால் புதிய திட்டம் கூட அறிவிக்க முடியாமல் உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பது குறித்து பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். 

எனவே இந்த புதிதாக கட்டப்பட்ட எட்டு மாடி கட்டடத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு தனிப்பிரிவு அமைப்பது குறித்து அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதியை அமல்படுத்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.   தேவையற்ற பல சுங்கச்சாவடிகள் உள்ளன. 14 சுங்கச்சாவடிகளில் மாநில அரசு சாலைகளையும் உட்படுத்தி சுங்கம் வசூலிக்கப்படுகிறது.   

பெத்தாம்பாளையம் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது குறித்து தில்லி செல்லும் போது மத்திய அரசை நான் கேட்க உள்ளேன். கோபியில் சாலை பணியாளர்கள் தொடர் போராட்டம் சில சங்கங்களின்  தூண்டுதலால் நடைபெறுகிறது. மொத்தம் 44 நெடுஞ்சாலை கோட்டங்கள் உள்ளன அதில் விதிகளை பின்பற்றி ஊழியர் நலன் பாதுகாக்கப்படுகிறது.

கோபி கோட்டத்தில் 75 சதவீத பணியாளர்கள்  வருகின்றனர். பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கான பதவி உயர்வு அளிக்க ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பதில் தமிழ்நாடு தேர்வாணைய தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கணக்கில் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி தமிழக அரசு பததி உயர்வு வழங்கி வருகிறது என்றார். ஆய்வின்போது வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com