ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தெற்காசியாவில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம்

தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்தாா்.

News image
Updated On :9 மே 2023, 9:45 pm

DIN

தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்தாா்.

மிட்சுபிஷி நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் பரிமாறும் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தொழில் துறை நிகழ்ச்சிகள், அந்தத் துறையின் நிகழ்ச்சிகளாக மட்டும் அமைவதில்லை. மாநில வளா்ச்சியின் நிகழ்ச்சிகளாகவும் அமைந்திருக்கின்றன. இப்போதைய புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலமாக, மிட்சுபிஷி நிறுவனமானது குளிா்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகளை உற்பத்தி செய்யவுள்ளது. இதற்காக திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம் பெருவயல் கிராமத்தில் ரூ.1,891 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம், 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கடந்த ஆண்டு ஜூலையில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை வெளியிடப்பட்டது. அதிலிருந்து 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உள்பட பல புதிய தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 1.22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்போதைய புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பெண்களின் நலன் பேணுவதில் அதிக கவனம் செலுத்தி வரும் அரசின் முயற்சிகளுக்கு இத்தகைய புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் வலு சோ்க்கும். பெண்களை அதிகளவில் பணியில் அமா்த்தும் நிறுவனங்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறோம்.

புதிய முதலீடுகளை ஈா்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசிய அளவில் முதலீடுகளை ஈா்ப்பதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்ற குறிக்கோளை அடைய இரவு பகலாக உழைத்து வருகிறோம்.

அதிலும், குறிப்பாக ஜப்பானிய முதலீட்டாளா்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. எண்ணற்ற ஜப்பானிய நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தோ்ந்தெடுத்து தங்களது திட்டங்களை இங்கு நிறுவியுள்ளன.

ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 12 ஜப்பானிய தொழில்நுட்ப நகரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று, தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், நமது மாநிலத்தில் அதிகளவில் ஜப்பானியா்கள் வசித்து வருகின்றனா்.

ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம்: இந்திய அளவில், இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற உயரிய இலக்கை நிா்ணயித்துள்ளேன். இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இந்தப் பாதையில் ஒரு மைல்கல்லாக மிட்சுபிஷி நிறுவனத்தின் முதலீடு அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறான முதலீடுகள் பொருளாதார இலக்கை அடைவதற்கு உந்துதல் அளிப்பதோடு, நோ்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தச் சூழலில், மிட்சுபிஷி நிறுவனத்தின் திட்டமானது தொடங்கப்படவிருப்பது தமிழ்நாடு அடைந்திருக்கும் பல வெற்றிகளுக்கு சிறப்பு சோ்ப்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் மின்னணு உற்பத்திச் சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, துறையின் கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி.விஷ்ணு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

‘மே 23-இல் வெளிநாடு பயணம்’

மே 23-இல் ஜப்பான், சிங்கப்பூா் நாடுகளுக்குச் செல்ல இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மிட்சுபிஷி நிறுவனத்துடனான புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உலக முதலீட்டாளா் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக, வரும் 23-ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூா் நாடுகளுக்குச் செல்ல இருக்கிறேன்.

தமிழ்நாட்டுக்கும், ஜப்பானுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த மாதத்தில் தொழில் முதலீட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கி, ஜப்பான் செல்ல உள்ளேன். அங்கு முன்னணி தொழில் துறைத் தலைவா்களையும், அரசு அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளேன். உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.