புதுப்பிக்கப்பட்ட பூங்காவில் காணாமல் போன 1000 மரங்கள்

சென்னை ஷெனாய் நகரில் அமைந்திருந்த மிகப்பெரிய பூங்காவில் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, புதுப்பிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரலில் திறக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட பூங்காவில் காணாமல் போன 1000 மரங்கள்


சென்னை: சென்னை ஷெனாய் நகரில் அமைந்திருந்த மிகப்பெரிய பூங்காவில் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, புதுப்பிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரலில் திறக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திட்டத்துக்காக, கடந்த 2010ஆம் ஆண்டில் இந்த பூங்கா மூடப்பட்டு, இங்கு செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகளும், இந்தப் பகுதியில் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் வழித்தடமும் அமைக்கப்பட்டது.

இந்த புதுப்பிக்கப்பட்ட பூங்கா குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தப் பூங்காவில் தற்போது நன்கு வளர்ந்த 5,400 மரங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அன்றைய நாளிலேயே, மற்றொரு திருத்தப்பட்ட செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 2,400 மரங்கள் இருப்பதாக மாற்றப்பட்டிருந்தது. ஆனால், உண்மை நிலவரம் எப்படியிருக்கிறது என்றால், உண்மையில் பூங்காவில் இருக்கும் மரங்களின் எண்ணிக்கையும், அதன் வளர்ச்சியும் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே.

நேரடியாக பூங்காவுக்குச் சென்று நமது எக்ஸ்பிரஸ் குழு களஆய்வு நடத்தியதில் பூங்காவில் கிட்டத்தட்ட 1,200 மரங்களுக்கும் குறைவாகவே இருந்தது.

இந்த பூங்காவில் பசுமைப்பரப்பை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பதுதான் மியாவாக்கி காடுகள் முறை. ஆனால், இந்த மரங்களும், மியாவாக்கி காடுகள் முறையில் நடப்பட்டிருக்கும் செடிகளும் கூட, பூங்காவுக்கு வருவோருக்கோ, நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கோ நிழல்தரும் வகையிலோ அல்லது அளவிலோ வளரவில்லை.

காலை 8 மணிக்குக் கூட, இந்தப் பூங்காவில் நிற்பதற்கு நிழல்தரும் மரங்கள் பெரியஅளவில் இல்லை.

பூங்கா திறக்கப்பட்டதும் ஆவலோடு நடைப்பயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்களுக்கு, இதில் போதிய மரங்கள் இல்லாததும், காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிப்பதால், இங்கு நடைப்பயிற்சி செய்வது என்பது சவாலானதாக மாறியதாகவும் கூறுகிறார்கள்.

இந்தப் பூங்காவுக்குக் கீழே மெட்ரோ ரயிலுக்கான கட்டுமானங்கள் இருப்பதால், இந்த பூங்காவுக்குள் மரங்களை நடுவதிலும் சிக்கல் ஏற்படலாம் அல்லது மரங்களை நட்டால் அவற்றின் வேர்கள் மூலம் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானங்களிலும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் கருதலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக நகரப்பகுதிகளில் இருக்கும் பூங்காக்கள் முற்பகல் 11 மணி வரை திறந்திருந்தாலும், இந்த திருவிகா பூங்கா 9 மணிக்கெல்லாம் மூடப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com