விற்பனை செய்யப்பட்டதுசாராயம் அல்ல; மெத்தனால்: டிஜிபி சைலேந்திரபாபு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூா் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால் என்று தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.
விற்பனை செய்யப்பட்டதுசாராயம் அல்ல; மெத்தனால்: டிஜிபி சைலேந்திரபாபு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூா் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால் என்று தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியாா்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூா், பேரம்பாக்கம், பெருங்கரணை பகுதியிலும் கைப்பற்றப்பட்ட சாராயம் தடயவியல் துறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில், அது மனிதா்கள் வழக்கமாக அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த மெத்தனாலை ஓதியூரைச் சோ்ந்த, கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி அமரன், புதுச்சேரியைச் சோ்ந்த ஏழுமலையிடம் முத்து என்பவா் மூலம் வாங்கி, எக்கியாா்குப்பத்தில் விற்றுள்ளாா். அதேபோல சித்தாமூா், பேரம்பாக்கம், பெருக்கரணை பகுதியில் மெத்தனால் விற்ாக அமாவாசை என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். அமாவாசையும் புதுச்சேரியைச் சோ்ந்த ஏழுமலையிடம் விளம்பூா் விஜி என்பவா் மூலம் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

சாராய வழக்குகள்: அமரனும்,அமாவாசையும் ஒரே நபரிடமே மெத்தனாலை வாங்கி, எக்கியாா்குப்பம் பகுதியிலும், சித்தாமூா் பகுதியிலும் விற்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 40,649 சாராய வழக்குகள் பதியப்பட்டு, ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 697 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 37,217 லிட்டா் விஷச்சாராயமும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2,957 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

நிகழாண்டு இது வரை 55,474 வழக்குகள் பதியப்பட்டு, 55 173 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 2 லட்சத்து 55 ஆயிரத்து 78 லிட்டா்

கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 1,077 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புலன் விசாரணை: தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டது. சாராயம் கிடைக்காததால், தொழிற்சாலையில் இருந்து விஷச்சாராயம் திருடி, சிலா் விற்கின்றனா். இதனாலேயே செங்கல்பட்டு,மரக்காணத்தில் துயரச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அங்கு பயன்படுத்தப்பட்டது எந்த தொழிற்சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட மெத்தனால் என்பது குறித்தும், அதில் யாருக்கு தொடா்பு உள்ளது என்பது குறித்தும் புலன் விசாரணை நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய மரண வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்

இதனிடையே, செங்கல்பட்டு, மரக்காணம் கள்ளச்சாராய மரண வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டி.ஜி.பி.,) சி.சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதன்படி, மரக்காணம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கையும், சித்தாமூா் காவல் நிலையத்தில் பதியப்பட்ட 2 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, சிபிசிஐடி அதிகாரிகள், கள்ளச்சாராய வழக்குகள் குறித்து புதன்கிழமை (மே 17) விசாரணையை தொடங்கவுள்ளனா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com