ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் மீது விழுந்த பேனர்: இரவு முழுவதும் மின் துண்டிப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே விளம்பர பேனர் விழுந்ததில் மின்கம்பம் சேதமடைந்து இரவு முழுவதும் மின் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் மீது விழுந்த பேனர்: இரவு முழுவதும் மின் துண்டிப்பு

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே விளம்பர பேனர் விழுந்ததில் மின்கம்பம் சேதமடைந்து இரவு முழுவதும் மின் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (50). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் ராட்சத அளவிலான விளம்பர பேனரை அமைக்க நிலத்தை வாடகைக்கு விட்டுள்ளார்.

இதில் சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சுமார் 40 அடி உயரத்தில் தனியார் விளம்பர பேனரை பொருத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.

அப்போது வீசிய காற்றில் உரிய அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் அடியோடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அருகில் இருந்த மின்கம்பங்கள் உடைந்து மின் துண்டிக்கப்பட்டதால் கீழ் படப்பை, மணிவாக்கம், அதனூர்  உள்ளிட்ட  பகுதி மக்களுக்கு மின்சாரம் தடைபட்டுள்ளது.

மேலும் பலத்த காற்றின் காரணமாக முன்கூட்டியே மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ராட்சத விளம்பர பேனரை அகற்றி மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வண்டலூர் வாலாஜாபாத் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உரிய அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com