சென்னை மக்களை தாயைப் போல காக்கும் கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்  பதிவு

சென்னை மக்களை கடற்காற்றுதான் தாயைப் போல காக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது தமிழ்நாடு வெதர்மேன் போட்டிருக்கும் பதிவால்.
சென்னை மக்களை தாயைப் போல காக்கும் கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்  பதிவு


சென்னை: ஒரு பக்கம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கொளுத்தி வந்தாலும், சென்னை மக்களை கடற்காற்றுதான் தாயைப் போல காக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது தமிழ்நாடு வெதர்மேன் போட்டிருக்கும் பதிவால்.

இன்று காலை 10 மணிக்கெல்லாம் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. வெளியில் வந்தாலே சுருண்டுவிடுவோம் என்ற நிலையில்தான் சென்னை மக்களின் நிலை இருந்தது. 

கோடை வெப்பத்துக்கு இல்லையா ஒரு எண்டு என்று மக்கள் வாடிவதங்கிய நிலையில்தான் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். அதாவது, நேற்றைய நாளைப் போலவே, சென்னையில் வெப்பம் 36 டிகிரி செல்சியஸைத் தொட்ட நிலையில் சென்னை நகருக்குள் கடல் காற்று செல்லத் தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில் சென்னை நகரின் மேற்குப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெப்பம் உக்கிரமடைந்து மேலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட நாளாக இன்றைய தினத்தை மாற்றி வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

எவ்வளவு வெப்பம் அடித்தாலும், கடற்காற்று நிலப்பரப்புக்கு வந்துவிட்டால் ஓரளவுக்கு மக்கள் தப்பித்துவிடுவார்கள் என்பதே நம்பிக்கை. கடற்காற்றும் இல்லாமல் வெப்பமும் கொளுத்தினால் அதோ கதிதான்.

நேற்றைய நிலவரம்
தமிழகத்தில் புதன்கிழமை, சென்னை உள்பட 15 நகரங்களில் கோடை வெப்பம் சதமடித்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் காலத்தில் தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. பல நகரங்களில் உச்சபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.

அதன்படி, புதன்கிழமை பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்) விவரம்:

வேலூா் - 106.88, திருத்தணி - 106.7, பரமத்தி வேலூா் - 105.8, பரங்கிபேட்டை - 105.26, மதுரை நகரம் - 104.72, மதுரை விமான நிலையம் - 104.0, சென்னை மீனம்பாக்கம் - 102.92, திருச்சி - 102.74, திருப்பத்தூா் - 102.2, தஞ்சாவூா் - 102.2, பாளையங்கோட்டை - 102.2, ஈரோடு - 101.12, கடலூா் - 100.4., சேலம் - 100.0, தருமபுரி - 100.0, சென்னை நுங்கம்பாக்கம் 99.0.

மே 18-ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று எச்சரித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com