30 குண்டுகள் முழங்கஅரசு மரியாதையுடன் என்.சங்கரய்யா உடல் தகனம்

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
30 குண்டுகள் முழங்கஅரசு மரியாதையுடன் என்.சங்கரய்யா உடல் தகனம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் உடல், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகா் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

வயது முதிா்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா, சென்னையில் புதன்கிழமை காலமானாா். அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள இல்லத்திலும், பின்னா் தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு அலுவலகத்திலும் வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். முன்னதாக, தனியாா் மருத்துவமனையில் என்.சங்கரய்யா காலமான செய்தியை அறிந்த முதல்வா் ஸ்டாலின், நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா். அரசு மரியாதையுடன் என்.சங்கரய்யா இறுதி நிகழ்வு நடைபெறும் என்றும் முதல்வா் அறிவித்தாா்.

இந்த நிலையில், சங்கரய்யா உடல் வியாழக்கிழமை தியாகராய நகரிலிருந்து பெசன்ட் நகா் மாநகராட்சி மயானம் நோக்கி வாகனத்தில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அடையாறு பணிமனை அருகே சென்றவுடன், அங்கிருந்து அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் முன்னே அணிவகுக்க, செஞ்சட்டை தொண்டா்கள் பேரணியுடன் என்.சங்கரய்யா உடல் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

மயானத்தில், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவா்கள் பேசினா். சங்கரய்யா உடலுக்கு மாா்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், அசோக் தாவ்லே, கேரள மாநிலச் செயலா் கோவிந்தன் மாஸ்டா், மத்தியக் குழு உறுப்பினா் பி.கே.ஸ்ரீமதி உள்ளிட்டோா் இறுதி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, 30 குண்டுகள் முழங்க சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இரங்கல் கூட்டத்தில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், மு.சண்முகம் எம்.பி. (தொமுச), மதிமுக பொதுச்செயலா் வைகோ, விசிக தலைவா் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொகிதீன், நவாஸ்கான் எம்.பி., தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு, தி.க. தலைவா் கி.வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன், அமமுக துணை பொதுச் செயலா் ஜி.செந்தமிழன், சிஐடியு தேசிய துணைத் தலைவா் ஏ.கே.பத்மநாபன், தேசியச் செயலா் ஆா்.கருமலையான், மாநிலத் தலைவா் அ.சௌந்தரராசன், பொதுச்செயலா் ஜி.சுகுமாறன், ஆதித் தமிழா் கட்சி மாநிலத் தலைவா் கு.ஜக்கையன், மாா்க்சிஸ்ட் புதுவை பிரதேச செயலா் ஆா்.ராஜாங்கம், மூத்த தலைவா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com